என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ் நாச்சியார் கோவிலடி பகுதியில் இடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றிக்கு வடக்கு முதல்வர் அனுப்பிவைத்த உரையின் மூலமே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும் குறித்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்கள் தமது உரிமைகளை அவர்களின் பாரம்பரிய நிலங்களில் குடியேறுவதற்கும் அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தமது கலாச்சாரங்களை பேணிப் பாதுகாப்பதற்கும் இராணுவப் பிரசன்னம் அற்ற இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கும், விரும்பி மேற்கொள்ளும் நியாயபூர்வமான போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன சிங்களத் தலைமைகளுக்கு இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு செயலாகத் தென்படுகின்றது.
அதனால் உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என சிலர் சிங்கள பேரினவாதிகளாக மாறிக் கொக்கரிக்கின்றார்கள்.
எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களைச் சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள்.
தமிழ் மக்களை அடக்கி ஆள முயற்சித்து அவர்கள் அது சார்பாக நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது மாதிரி இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா? உதாரணத்திற்கு சட்ட வலுவற்ற தன்மையில் வடமாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று தான் நாம் அண்மையில் கூறினோம்.
அதனைத் திரித்து வடமாகாணத்தில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது, சிங்கள மக்கள் குடியிருக்கக் கூடாது, சிங்கள மக்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று எல்லாம் திரித்துக் கூறி என் மீதான பலத்த ஒரு வெறுப்பினை ஆரம்பித்துள்ளார்கள்.
ஆகவே நாம் எமது பிரச்சினைகளைக் கூறக் கூடாது. அவர்கள் தருவதை ஏற்க வேண்டும்; என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது.
இதற்குள் அரசியலும் சேர்ந்து எனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அது மட்டுமல்ல. அவற்றைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவும் அவருடைய உரையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.