அமெரிக்க அதிபர் தேர்தல் : சாதனையை முறியடித்த ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் நேற்று நடந்தது.

இதில் அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு, எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து இருவரும் கார சாரமாக விவாதித்தனர். விவாதம் சுமார் 98 நிமிடங்கள் நடந்தது.

இந்த விவாதம் அமெரிக்காவில் பிரபலமான 13 டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பானது. இதை நாடு முழுவதும் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக பார்த்து விவாதத்தை கேட்டு பொதுமக்கள் ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட சர்வேயில் 8 கோடியே 40 லட்சம் பேர் விவாதத்தை டி.வி.யில் பார்த்துள்ளனர்.

இதன்மூலம் கடந்த 36 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜிம்மி கார்டர்- ரொனால்டு ரீகன் இடையே நேரடி விவாதம் நடந்தது.

அதை 8 கோடியே 6 லட்சம் பேர் மட்டுமே டி.வி.யில் பார்த்தனர். இதுவரை அதுவே அதிகம் பேர் பார்த்து ரசித்த நேரடி விவாதமாக கருதப்பட்டு வந்தது.

தற்போது ஹிலாரி- டிரம்ப் நேரடி விவாதம் அந்த வரலாற்று சாதனையை முறியடித்தது. விவாதத்தின்போது தனக்கும், டிரம்புக்கும் இடையேயான வித்தியாசத்தை ஹிலாரி விவரமாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

முதல் நேரடி விவாத முடிவில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு பெருமளவு ஆதரவு பெருகியுள்ளது. அடுத்த விவாதம் வருகிற அக்டோபர் 9-ந்தேதி நடக்கிறது. அப்போது ஹிலாரிக்கு எதிரான கருத்துக்களை கூறி மக்கள் ஆதரவை பெறுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.