எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை நாட்டில் பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட மாட்டாது. தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் தையல் மெஷின்களையும் வேறு பல பொருட்களையும் இலவசமாகத் தந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள்.
இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு தெமட்டகொடையில் நேற்று முன்தினம் மாலை பாலம் ஒன்றினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
‘ஏழை மக்களின் நலன்களைப் பேணும் ஒரே கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும். சிலர் இக்கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். ஏழைகளின் கட்சியான இக்கட்சியைப் பிளவுபடுத்தவோ இன்றேல் புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கவோ வேண்டாமென சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.
மத்திய கொழும்பில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளின்றி ஐக்கியத்துடன் சமாதானமாக வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இப்பகுதி மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ளார்கள். கடந்த 50 வருட காலத்தில் இம் மக்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை.
இங்குள்ள மக்கள் தமது பிள்ளைகளை இடுப்பில் வைத்துக் கொண்டே தொலைக்கட்சியில் சின்னத்திரை (டெலிடிராமா) நாடகம் பார்ப்பதையே வழமையாகக் கொண்டுள்ளார்கள். இடுப்பிலிருந்து கொண்டே அவர்களது பிள்ளையும் படிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். அவர்கள் படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கொழும்பிலிருந்து டாக்டர்களும் பொறியியலாளர்களும் உருவாக வேண்டும்.
கிராமங்களிலிருந்து டாக்டர்களும் பொறியியலாளர்களும் உருவாக முடியுமென்றால் ஏன் கொழும்பிலிருந்து உருவாக முடியாது.
கொழும்பிலுள்ள பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்காததினாலேயே முச்சக்கர வண்டி ஓட்டுனர்களாகவும் நடைபாதை வியாபாரிகளாகவும் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இதற்காக இப்பகுதி மக்கள் தமதுபிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
இன்று உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன. எமது வெளிநாட்டுக் கொள்கைகளே உலக நாடுகள் எம்மை ஆதரிப்பதற்கு காரணமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் இறைமையை உலக நாடுகளுக்கு தாரை வார்ப்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். ஜனாதிபதி ஒரு போதும் அவ்வாறு செயற்படமாட்டார் என்றார்.