பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

 

hqdefault (1)

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96.

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனிபா. இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது அவரது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடத் தொடங்கிய ஹனிபா, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியும், இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். வெளிநாடுகளிலும் அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசு உண்டு.

‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘நட்ட நடு கடல் மீது’ ‘உன் மதமா என் மதமா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் அவருக்கு சிறப்பு சேர்த்தன. ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்று காலமான நாகூர் ஹனீபா உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.