இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க மலேசிய நிறுவனம் உறுதி!

 
unnamed-1_fotor
சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மலேசிய நிறுவனமான சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினருக்கும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது, இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம், மின் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி ஆகியவற்றுக்கு தேவையான உதவிகளை வழங்க குறித்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. 
சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் தலைவர் எலிஸ் லேன்ங் தலைமையிலான முதலீட்டுக் குழுவினருடனான சந்திப்பின் போது, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் அவர்  இணக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் காரணமாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பல சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்தவகையில் மலேசியாவில் உள்ள பிரபல நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.
அந்தவகையில், சர்வதேச ரீதியில் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் உயர் மட்டக் குழுவினருடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அத்துடன் விசேடமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பணிக்கு தங்களது உதவிகளை வழங்கவும் அது முன்வந்துள்ளது. அத்துடன், விவசாய, மின் உற்பத்திகளுக்கு தேவையான நிதியை அரசுக்கு வழங்கவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் தலைவர் எலிஸ் லேன்ங் எம்மிடம் உறுதியளித்தார். – என்றார்.