ஆயுதம் எந்தமாட்டோம்; ஆனால் தம்மை ஆளவிடமாட்டோம்

sambanthan-tna

 

தமிழர்களின் 30 வருடத்துக்கு மேற்பட்ட உரிமைப் போராட்டம் அவர்களின் எண்ணற்ற உயிர்களைக் காவு கொண்டதை எவராலும் மறுக்க முடியாது.யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டு உயிரிழந்த புலிகளைத் தவிர அந்த யுத்தத்தில் எந்த விதத்திலும் தொடர்புபடாத எத்தனையோ அப்பாவித் தமிழர்கள் இறந்தமைதான் அதிகம்.

 

இந்தப் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து தாம் நிம்மதியாக வாழும் காலம் பிறக்காதா என தமிழர்கள் ஏங்கிய நாட்கள் ஒன்றல்ல,இரண்டல்ல .மஹிந்தவின் ஆட்சியில் 2006 இல் தொடங்கப்பட்ட புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் 2009 இல் முடியும்போது தமிழர்  தரப்பில் எண்ணற்ற உயிர் இழப்புகளும்,சொத்துக்கள் இழப்புகளும்,உடல் உறுப்புகள் இழப்புகளும் ஏற்பட்டன.இடம்பெயர்ந்து சொல்லொண்ணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்தனர்.

 

யுத்தம் முடிவடைந்ததும் இனியாவது தமது உயிரிழப்புக்கள்  நிறுத்தப்பட  வேண்டும் என்று தமிழர் விரும்பினர்.அந்த நிலைமையை ஏற்படுத்துவதற்காகவும்,இழந்த உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அரசியல் தீர்வு என்ற வடிவில் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் யுத்த காலத்தில் காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடிப்பதற்காகவுமே தமிழர்கள் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடங்கினர்.

 

யுத்தம் முடிந்து  சுமார் 5 வருடங்களாகத் தொடர்ந்த மஹிந்தவின் ஆட்சியில் தமிழர்களின் ஜனநாயகப் போராட்டம் உச்சத்தில் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.அந்தப் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது.

 

தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் மஹிந்த அரசுக்கு அழுத்தங் கொடுக்கும் வகையில்,அந்தப் போராட்டங்கள் வலுவானதாகவும் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தன.

 

ஆயுதப் போராட்டத்தைப் போன்று இந்த ஜனநாயகப் போராட்டத்தையும் நசுக்குவதற்காக மஹிந்த அரசு பல்வேறு வகையான   நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தபோதிலும் அது எல்லாத் தடைகளையும் தாண்டி வீறுநடை போடவே செய்தது.இறுதியில் மஹிந்தவின் அரசைக் கவிழ்க்கும் அளவுக்கு அந்தப் போராட்டம் வலுவடைந்தது.

 

ஆயுதப் போராட்டத்தில் தாம் இழந்தவற்றுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இனி உயிர் இழப்பு உட்பட எந்த இழப்பையும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவுமே தமிழர்கள் ஜனநாயகப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

 

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அந்த ஜனநாயகப் போராட்டத்தின் நோக்கத்தை  இந்தப் புதிய ஆட்சியில் எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் தமிழர்கள் குறியாகவே உள்ளனர்.அந்த அடிப்படையில் தமிழர்களின் அரசியல் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.அதுதான் ”நெகிழ்வுப் போக்கு” என்ற மாற்றம். 

 

மஹிந்தவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜனநாயகப் போராட்டம் அந்த ஆட்சிக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆனால்,இந்த ஆட்சியில் நெகிழ்வுத் தன்மைகொண்ட-இணக்கப்பாட்டு தன்மையைக் கொண்ட போராட்டமாக  அந்த ஜனநாயகப் போராட்டம் மாற்றப்பட்டுள்ளது.

 

அது சரியான வியூகமாக இருப்பதால்தான்  மஹிந்தவின் ஆட்சியில் அடைய முடியாத சில விடயங்களை இந்த ஆட்சியில் அடைய முடிந்திருக்கின்றது.ஆனால்,அது முழுமையான அடைவாக இல்லாதபோதிலும்,இந்த ஓட்டத்தைப் பார்க்கும்போது ஒரு நாள் ”முழுமை” என்ற ஒன்றை அடைய முடியும் என்றே தெரிகின்றது.

 

குறிப்பாக,கடந்த அரசால்  சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டமை,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமை, காணிகள் விடுவிப்பு ,சில அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை நம்பிக்கையூட்டும் சில விடயங்களாக எடுத்துக்கொள்ள முடியும்.

 

அந்த வரிசையில்தான் தமிழர்களின் இலக்கான அரசியல் தீர்வு விவகாரமும் அமைந்துள்ளது.புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வந்து அதனூடாக அரசியல் தீர்வை முன்வைக்கும் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளதை நாம் அறிவோம்.

 

தமக்கான அரசியல் தீர்வு இவ்வாறுதான் அமைய என்றொரு வரைவை மனதில் வைத்துக் கொண்டு இருக்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு.அந்த வரைவுக்கு மாற்றமாக அரசால் முன்வைக்கப்படும் தீர்வு அமையுமாக இருந்தால் அதை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருக்கின்றது.

 

வடக்கு-கிழக்கு இணைப்பு,காணி,பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் தமக்குத் தேவை;அதுவே தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வரும் என்று கூட்டமைப்பு கூறுகின்றது.

 

ஆனால்,அரசோ சமஷ்டி இல்லை ஒற்றையாட்சிதான்.காணி,பொலிஸ் அதிகாரங்களும் இல்லை.வடக்கு-கிழக்கு இணைக்கப்படவும் மாட்டாது என்று கூறி வருகின்றது.

 

 இதை முற்றாக எதிர்க்கும் கூட்டமைப்பு தாம் விரும்புகின்ற தீர்வைத் தமக்குத் தராவிட்டால் நாம் அதை ஏற்கமாட்டோம்.மாறாக,அரசு தம்மை ஆள்வதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.அதற்காக ஆயுதமும் எந்தமாட்டோம் என்று கூட்டமைப்பு கூறி வருகின்றது.

 

இலங்கை வந்த ஐ.நாவின் செயலாளர் பாங்கி மூனைச் சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாம் கோரும் தீர்வு எமக்கு கிடைக்காவிட்டால் அரசு திணிக்கும் தீர்வை நாம் ஏற்கமாட்டோம்.மாறாக,அரசால் எம்மை ஆள விடமாட்டோம்.அதற்காக ஆயுதம் எந்தமாட்டோம் என்று கூறி இருந்தார்.இதனைத் தொடர்ந்து இந்த வாரம் திருமலையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கூறும்போதும் இவ்வாறே கூறி இருந்தார்.

 

சம்பந்தன் இப்போது ”ஆயுதம் ஏந்தமாட்டோம் ,ஆனால்,தம்மை ஆளவிடமாட்டோம்” என்ற வசனத்தை அடிக்கடி பயன்படுத்துவதால் அதில் ”தம்மை ஆளவிடமாட்டோம்” என்பதன் அர்த்தம் என்ன என்று அறிவதற்கு தமிழருக்கு இப்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

 

அரசுக்கான முழு ஆதரவையும் நீக்குதல் அல்லது அரசால் இன்றி தம்மால் தம்மை ஆளுதல் என்பதா இதன் அர்த்தம் என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.அரசியல் தீர்வை அரசிடம் கேட்பதை விட்டுவிட்டு சர்வதேசத்தின் நேரடி உதவியுடன் தம்மைத் தாமே ஆளக்கூடிய இராஜதந்திர ஏற்பாடுகள் எதிலும் கூட்டமைப்பு ஈடுபடப் போகிறதா என்ற கேள்வியும் எழுகின்றது.

 

”தம்மை ஆளவிடமாட்டோம்” என்ற வசனத்தை சம்பந்தன் அடிக்கடி பாவிப்பதால் அரசும் அந்த வசனத்தின்மீது இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.ஆயுதமும் ஏந்தாமல் அரசு வழங்கும் அரசியல் தீர்வும் இல்லாமல் தம்மைத் தாமே ஆள்வதாக இருந்தால் அது சர்வதேசத்தின் உதவியால் மாத்திரம்தான் முடியும்.அப்படியென்றால் சர்வதேசத்தின் தலையீட்டுடன் சுயாட்சியைப் பெறுவதற்கான நகர்வை கூட்டமைப்பு மேற்கொள்கிறதா என்றும் அரசு இப்போது யோசிக்கத் தொடங்கியுள்ளது.

 

ஐ.நாவின் தலையீட்டால் புதிய நாடுகள் உருவானமையும் ஒரு நாட்டுக்குள் சுயாட்சி பெற்றுக் கொடுக்கப்பட்டமையும் உலக வரலாறாக இருப்பதால் சம்பந்தனின் இந்தக் கூற்றை அரசு சற்று ஆழமாக நோக்குவதாகவே அரசுக்குள் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

 

[ எம்.ஐ.முபாறக் ]