ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், நியூயார்க் நகரில் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் பலியானதன் பின்னணியில் பாகிஸ்தானின் உள்ளதாக இந்தியா குற்றம்சாட்டுவது தொடர்பாக பதில் அளித்த நவாஸ் ஷெரிப், ‘இதைப்போன்ற சம்பவங்களில் உரிய புலனாய்வு விசாரணை நடத்தி முடிக்கவே பல நாட்கள் ஆகும். ஆனால், உரி தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே பாகிஸ்தான் மீது இந்தியா பழி போடுகிறது, இது இந்தியாவின் நீண்டநாள் பழக்கமாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்களை இந்தியா ஒருபோதும் வழங்கியதில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்றுவரும் கலவரத்தில் 108 பேர் பலியாகியுள்ள நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.