முஸ்லிம்கள் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து எம்முடன் ஒன்று சேருங்கள். நாம் அமைக்கவுள்ள ஆட்சியில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பும் ஏனைய சமூகங்களைப் போல் சகல உரிமைகளும் வழங்கப்படும் என மஹிந்த தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்றுக் காலை பத்தரமுல்லை, நெலும்பொக்குன மாவத்தையிலுள்ள இணைந்த எதிர்க்கட்சியினரின் அலுவலகத்தில் மஹிந்த அணி ஆதரவு முஸ்லிம் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்று நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ தலைமை வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்களுக்கான முஸ்லிம் பிரிவொன்றினை ஆரம்பிப்பது பற்றி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அப்பிரிவுக்கு முஸ்லிம் முற்போக்கு முன்னணி எனப் பெயரிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
நாம் அமைக்கும் கட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது கடந்த காலங்களில் எமது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் இடம்பெற்றன. இதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவற்றை முஸ்லிம்கள் மறந்துவிட வேண்டும் என்றார்.
நிகழ்வில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சியில் பொரளை முதல் அனுராதபுரம் வரை 22 பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடப்பட்டுள்ளன.
சில தாக்கப்பட்டுள்ளன. மஹியங்கனை பள்ளிவாசல் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.
இஸ்லாம் பாடம் போதிப்பதற்கு ஆசிரிய வெற்றிடங்கள் நிலவினாலும் மௌலவி ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவில்லை. முஸ்லிம் பாடசாலைகள் நிர்மாணிப்பதற்கு காணி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது என்னும் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
‘முஸ்லிம்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முஸ்லிம்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து மஹிந்த ராஜபக் ஷவின் பக்கம் ஒன்றுசேர வேண்டும் என பசில் ராஜபக் ஷ வேண்டிக் கொண்டார்.
இதேவேளை, மஹிந்த ஆதரவு அணியின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் முற்போக்கு முன்னணியை எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் 5 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள இணைந்த எதிர்க்கட்சியினரின் காரியாலயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.