உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி: விஜயகாந்த் முடிவு?

51700360கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க. தோல்வியை தழுவியது.

மேலும் தேர்தலில் தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கியும் கணிசமாக குறைந்தது. தே.மு.தி.க. சரிவை சந்தித்ததால் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியின் சரிவை நிலைநாட்ட விஜயகாந்த் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் அவர் வெளிமாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்த விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட கட்சியில் ஆள் இல்லை. தேர்தலுக்கு செலவு செய்ய பணமும் இல்லை. எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம். தேர்தலை புறக்கணித்து விடலாம் என்று மாவட்ட தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் அவர்களின் கருத்தை விஜயகாந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா, சாவா போராட்டம். எனவே நிச்சயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜயகாந்த் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து தே.மு.தி.க. முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

வீழ்ந்த சரிவை நிலை நாட்டுவதற்காக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவது உறுதி. ஆனால் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜயகாந்தின் விருப்பம்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 30-ந்தேதி வரை நடைபெறும். தேர்தல் தேதி அறிவித்ததும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.