இலங்கை நாட்டு மக்கள் பேரினக் கட்சிகளின் வாலைப் பிடித்து திரிந்த காலத்தில் மர்ஹூம் அஷ்ரப் பெருந்திரளான மக்களை தன் பக்கம் ஈர்த்து முஸ்லிம்கள் தங்களது சுயகாலில் நின்று அரசியல் செய்ய முடியுமென்பதை சாதித்துக்காட்டியிருந்தார்.தமிழ் கட்சிகளுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஷ்ரப் முஸ்லிம்கள் தனிக் கட்சியின் தேவையை உணர்ந்த போது,இதனை உருவாக்குவது சாத்தியமல்ல என்ற நிலையில் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கி காட்டியிருந்தார்.அந் நேரத்தில் பேரினக் கட்சிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு பொருட்டாகக் கூட மதித்திருக்கவில்லை என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகளுள்ளன.இலங்கை இந்திய ஒப்பந்தம் இதற்கு மிகப் பெரும் சான்றுபகர்கின்றது.மர்ஹூம் அஷ்ரப் மு.காவை உருவாக்கியதன் பிற்பாடு இலங்கை முஸ்லிம் அரசியலின் போக்கு அப்படியே தலைகீழாக மாறிப் போனது.அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தேர்தல் வெட்டுப் புள்ளியை குறைக்குமளவு மு.காவின் செல்வாக்கு இருந்தது.அன்று அஷ்ரப் மிகக் கடுமையான தியாகங்களுக்கு மத்தியில் இக் கட்சியை உருவாக்கியிராது போயிருந்தால் இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் தனித்துவம் இற்றைவரை கிடைக்காதே போயிருக்கலாம்.விடுதலைப் புலிகளை எதிர்த்து அரசியல் செய்யும் திராணி அவ்வளவு இலகுவில் யாருக்கும் வந்துவிடாது.இன்று மர்ஹூம் அஷ்ரபின் வழி காட்டல்களில் றிஷாத்,அதாவுல்லாஹ் ஆகியோர் ஒரு தனிக்கட்சியை ஆரம்பித்து பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு தனிகட்சி அமைத்து செல்லும் தைரியத்தை மர்ஹூம் அஷ்ரப் தான் வழங்கியிருந்தார் என்றால் மிகையாகாது.
இலங்கையில் அரசியல் செய்யும் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் வாதிகள் மர்ஹூம் அஷ்ரபைத் தான் இன்றும் தங்களது உதாரணப் புரிசராக கூறுகின்றார்.இருப்பினும் மர்ஹூம் அஷ்ரப் வளர்த்த மு.கா என்ற அடையாளத்தின் மூலம் நேரடியாக பயன்பெற்றுக் கொண்டிருப்பவர் மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மாத்திரமேயாகும்.ஏனையவர்கள் தங்களுக்கான செல்வாக்கை தாங்களே உருவாக்கிக்கொண்டுள்ளனர்.இன்னுமொருவர் அடித்தளமிட்டு கட்டிய கட்டடத்தைக் கூட அமைச்சர் ஹக்கீமால் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் அமைச்சர் ஹக்கீமின் ஆளுமை.பதினொரு உறுப்பினர்களுடன் அஷ்ரப் விட்டுச் சென்ற மு.கா தற்போது ஏழு ஆசனங்களும் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் அதனைக் கூட தக்க வைக்க முடியாத நிலையில் தான் மு.கா உள்ளது.அமைச்சர் றிஷாத் படிப்படியாக வளர்ந்து ஐந்து ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு மு.காவின் கோட்டையான அம்பாறைக்குள்ளும் நுழைந்துவிட்டார்.அமைச்சர் ஹக்கீம் மு.காவை வளர்க்காது போனாலும் அஷ்ரபின் மு.காவை வீழாது பாதுகாத்திருக்கலாமல்லவா? அமைச்சர் றிஷாதல் முன்னேற முடியுமென்றால் ஏன் மு.காவால் முன்னேற முடியாது போனது?
இன்று மு.காவிற்கு விழும் வாக்குகள் அனைத்தும் மர்ஹூம் அஷ்ரப் வளர்த்தெடுத்த மு.கா என்ற நாமத்திற்கேயாகும்.இந்த மு.காவின் தலைவராக யார் இருந்தாலும் அந்த வாக்கெண்ணிக்கையை மு.கா பெற்றுக்கொள்ளும்.இன்று அமைச்சர் ஹக்கீம் பல இடங்களில் மதிக்கப்படுகிறார் என்றால் அது அஷ்ரப் என்ற நாமத்தின் மூலம் கிடைகின்ற மரியாதையாகும்.அஷ்ரப் நட்ட மரத்தில் இலகுவாக கனி உண்டு கொண்டிருக்கும் ஹக்கீம் ஒரு போதும் அவரை மறந்து செயற்பட முடியாது.செப்டெம்பர் பதினாறாம் திகதி என்றாலே இந்த மாமனிதரின் நினைவு நாள் என்பதை பலரும் அறிந்து வைத்திருந்தாலும் அமைச்சர் ஹக்கீமிற்கு நினைவிருக்கின்றதா என்பது தான் கேள்வி அடையாளமாக இருக்கின்றது.
அஷ்ரப் மரணித்த ஆரம்ப காலத்தில் அஷ்ரபின் நினைவு தினத்தை அமைச்சர் ஹக்கீம் ஏதோ ஒரு வகையில் நினைவு படுத்தியிருந்தார்.அந் நேரத்தில் அனைவரும் அஷ்ரபை தங்கள் தலைவராக கூறிக்கொண்டிருந்ததாலும் அஷ்ரப் என்ற நாமத்தின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள அது அவசியமாகவுமிருந்தது.காலம் செல்லச் செல்ல அஷ்ரபின் புகைப்படத்தைக்கொண்டு வாக்கு கேட்கும் நிலையை ஏனையவர்கள் கைவிட்டனர்.இதன் பிற்பாடு அமைச்சர் ஹக்கீம் மர்ஹூம் அஷ்ரபின் நினைவை மறந்துவிட்டாரா என்றே கேட்கத் தோன்றுகிறது.2014,2015ம் ஆண்டுகளில் அஷ்ரப் மரணித்த குறித்த தினம் அமைச்சர் ஹக்கீம் இலண்டன் சென்றிருந்தார். 2015ம் ஆண்டு தனது குடும்பத்துடன் இலண்டன் சென்று விருந்துண்டு அப் புகைப்படங்களை மகிழ்ச்சிப் பிரவாகத்தில் பகிர்ந்துமிருந்தார்.அமைச்சர் ஹக்கீம் இலண்டன் செல்வதோ அல்லது மகிழ்ச்சியாக இருப்பதையோ பிழை எனவில்லை.குறித்த தினம் அக் கட்சியை வளர்த்த அஷ்ரபை சற்று நினைவுகூர்ந்திருக்கலாம்.முக்கியமான தேவை ஒன்றிற்காக வெளிநாட்டு சென்றிருந்தால் கூட அதனை யாருமே பிழை எனக் கூற முடியாது.
கடந்த 2015ம் ஆண்டு இலண்டன் சென்று தனது குடும்ப சகிதம் உணவுண்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியானதும் அது அஷ்ரபை உள்ளத்தால் நேசித்தவர்களிடையே மிகக் கடும் எதிர்ப்பை பெற்றிருந்தது.குறித்த தினம் சம்மாந்துறை,கல்முனை,வாழைச்சேனையில் சிறு சிறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்த நிகழ்வுகளில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதும் அது மு.காவின் தலைமையிடமிருந்து ஒரு ஒழுங்கு முறைப்படி திட்டமிடப்பட்டதல்ல.கல்முனையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்தார்.அதற்கு முந்திய வருடமும் இவர் இந் நிகழ்வை ஏற்பாடு செய்ததோடு இம் முறையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தற்போது மு.காவில் எஞ்சி இருப்பவர்களில் ஒப்பீட்டளவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அஷ்ரப் மீது பற்றுக்கொண்டவர் என்பதை இவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.இம்முறை பிரமாண்டமான முறையில் மு.கா அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த போது அதில் கலந்துகொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனித்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை இந் நிகழ்வை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.வாழைச்சேனையில் முதலமைச்சர் நஸீர் அகமதின் பங்கு பற்றுதலோடு ஒரு நிகழ்வு ஏற்பாடாகிருந்தது.குறித்த தினம் இலண்டனில் கூட ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியுமிருந்தார்.
அமைச்சர் ஹக்கீம் அஷ்ரபின் நினைவு தினத்தை புறக்கணித்தமை மு.கா ஆதரவாளர்களிடத்தில் அதிக வெறுப்பை தோற்றுவித்திருந்தது.அத் தினத்தில் அமைச்சர் றிஷாத் அஷ்ரப் நினைவு தின புலமைப்பரிசில் திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தார்.இவ்விடயம் மு.காவின் மூத்த போராளிகளிடையே அமைச்சர் ஹக்கீம் மீதான வெறுப்பை இன்னும் அதிகரித்திருந்தது.அமைச்சர் ஹக்கீம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.இதன் காரணமாக சம்மாந்துறையில் இளைஞர் மாநாடு இடம்பெற்ற மிகக் குறுகிய காலப்பகுதியில் (இரண்டு மாதம்) சாய்ந்தமருதில் இளைஞர் மாநாடு ஒன்றை நடாத்தி அதனுடன் சேர்த்து அஷ்ரப் நினைவுதினமெனும் பெயரில் ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.இது அஷ்ரபின் நினைவு தினத்திற்கு ஒன்னரை மாதங்களுக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்களை வைத்து சிந்தித்தாலே மு.காவின் உண்மை முகத்தை விளங்கிக்கொள்ள முடியும்.இந் நிகழ்வில் மு.கா ஒரு அஷ்ரப் விருதொன்றை ஏற்பாடு செய்திருந்தது.இந்த விருது அந் நிகழ்வோடு நிறைவுற்றுள்ளமை அஷ்ரபின் நாமத்தை களங்கப்படுத்துவதாகவே அமைகிறது.
இம் முறை மு.கா அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வை அழகிய தொனியில் அல் குர்ஆன் என்ற நிகழ்வோடு சேர்த்து நடாத்தியிருந்தது.கடந்த இரு வருடங்களாக அஷ்ரப் நினைவு தினத்தை சிறிதும் கவனத்திற்கொள்ளாத அமைச்சர் ஹக்கீம் தற்போது இதில் கவனம் எடுக்கின்றமை அரசியல் இலாப நோக்கம் என்பதை சிறுதும் சந்தேகமின்றி விளங்கிக்கொள்ளலாம்.கிழக்கில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக கிழக்கின் எழுச்சி,அமைச்சர் அதாவுல்லாஹ் அணியினர்,அமைச்சர் றிஷாத் அணியினர்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என பலரும் பல் கோண ரீதியாக போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளனர்.இதற்குள் மு.காவில் இருந்து கொண்டு ஹசனலி,பஷீர் சேகுதாவூத் உட்பட பலரினது போராட்டங்களும் இடம்பெறுகின்றன.இவர்கள் அனைவரும் சேர்ந்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை நிறுவப்போவதாகவும் அறிய முடிகிறது.வழமை போன்று மு.கா இதனை கவனத்திற்கொள்ளாது போனால் அஷ்ரபின் நாமத்தை வைத்து மு.காவை இலகுவாக அழித்து விடுவார்கள்.குறித்த தினம் கிழக்கின் எழுச்சி அமைப்பினால் முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனம் என்ற நிகழ்வொன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அஷ்ரப் நினைவு தினத்தை நினைவுகூறாமல் விட்டிருந்தால் அன்றைய பிரதான கருப்பொருளாக இவ்விடயமே மாறியிருக்கும்.இது மக்களை மு.காவை விட்டும் பிரித்தெடுப்பதற்கான இலகு வழியாகவும் அமைந்திருக்கும்.இதனை அமைச்சர் ஹக்கீம் அறியாமலுமில்லை.இதற்கு எதிரான ஹக்கீமின் ஆட்டம் தான் பிரமாண்டமான முறையில் இடம்பெற்ற அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு.இச் சந்தர்ப்பத்தில் அஷ்ரபை மீள எழுப்புவதே பொருத்தமானதும் கூட.
மு.கா கடந்த முறை கூட இளைஞர் மாநாட்டில் தான் அஷ்ரபை நினைவு கூர்ந்திருந்தார்கள்.இப்போதும் இன்னுமொரு நிகழ்வுடன் சேர்த்தே குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.அஷ்ரபின் தியாக வரலாறுகளைக் கூற மு.காவிற்கு ஒரு தனி நிகழ்வு ஏற்பாடு செய்ய முடியாதா? அல்லது தனி நிகழ்வு ஏற்பாடு செய்யுமளவு அஷ்ரப் தகுதியற்றவரா? கொழும்பில் அஷ்ரபை நினைவு கூறுவதன் மூலம் மு.காவின் இளம் போராளிகளிடம் அஷ்ரபின் தியாக வரலாறுகள் அதிகம் சென்றிருக்க வாய்ப்பில்லை.அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வை கிழக்கு மாகாணத்தில் நடத்துவது தான் சிறந்தது.அங்கு தான் மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர்.தேர்தல் நலனைக் கொண்டு அஷ்ரபின் நினைவு தினங்களை கிழக்கில் நடாத்தும் போது மக்களை மு.காவை இணைத்துப் பயணிக்க வழி காட்டும்.சில வேளை இவ்வாறான நிகழ்வுகளை கிழக்கில் நடாத்தும் போது எதிர்ப்புகள் பலவற்றை சந்திக்க நேரிடும் என்பதற்கு அஞ்சியே ஹக்கீம் இப்படியான வேலையை செய்திருக்கலாம்.அஷ்ரப் மரணித்த நாளை நினைவு கூற கூறுவதன் நோக்கம் அவரது தியாகங்களை இளம் சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காகும்.அந்த நோக்கம் இவ்விடத்தில் பாழ்பட்டுவிட்டது.இங்கு அஷ்ரபை நினைவு கூறச் சொல்வதன் மூலம் அதற்கு கத்தம்,பாத்திகா என்ற தவறான அர்த்தம் வழங்க வேண்டாம்.
அஷ்ரபின் மரணம் சதியா? விதியா? என்ற சந்தேகம் நீடித்துள்ள நிலையில் இது பற்றி மு.கா தலைவர் வாய் திறக்க முடியாத நிலையிலேயே உள்ளார்.இம் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.அஷ்ரபின் மரணத்தை விசாரணை செய்ய மு.கா எந்த சந்தர்ப்பத்திலும் முயலாததன் மர்மம் தான் என்ன? அஷ்ரபின் மரணம் திட்டமிடப்பட்டதென்றால் அதனை கண்டு பிடித்து குறித்த நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும்.இதற்கு மு.கா முயலாமை அதன் முக்கிய தலைகள் மீது மக்களது சந்தேகப்பார்வைகளை விழச் செய்கிறது.பலரது சந்தேக மரணங்கள் கிளறப்படும் இத்தருவாயிலாவது மு.கா இதற்கு முயலாது போனால் மக்கள் சந்தேகப்படுவது ஒன்றும் தவறுமில்லை.அஷ்ரபின் புதை குழியில் தான் பலர் தங்களது எழுச்சி விதைகளை இட்டுக்கொண்டார்கள் என்ற விடயம் மக்கள் சந்தேகத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கின்றது.அஷ்ரபின் மரணத்தைக் கண்டறிய முயற்சிக்காதவர்கள் அவரை நினவு கூற தகுதியானவர்களா?
அஷ்ரப் பற் பல கனவுகளோடு அரசியலை செய்திருந்தார்.அவரின் கனவுகளில் ஒன்றையாவது இந்த மு.கா இற்றைவரை நிறைவு செய்துள்ளதா? அஷ்ரப் ஒலுவில் துறைமுகத்தை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருந்தார்.இன்று அதன் காரணமாக காணியை இழன்தோரிற்கு உரிய நஷ்டயீடு,நஸ்டயீடே வழங்கப்படவில்லை.நிச்சயமாக குறித்த பாதிக்கப்பட்ட மக்கள் அஷ்ரபை திட்டிக் குவிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.அமைச்சர் றிஷாத் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பிரதமருடன் பேசி ஒலுவில் துறைமுகத்திற்கான கடலரிப்பு பிரச்சினையை தீர்க்க நிதியை ஒதுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.இந் நிலையில் மு.காவின் தலைவர் குறுக்கிட்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அந்த முயற்சியை தடுத்திருந்தார்.அஷ்ரபின் கனவை தானும் செய்யவில்லை பிறரையும் செய்ய விடுவதுமில்லை என்ற நிலையில் தான் மு.காவுள்ளது.இது தான் அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா? தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தை முன்னேற்றவேண்டிய தேவை மு.காவிற்குள்ளது.இப் பலகலைக்கழகம் அஷ்ரபின் பிறந்த நாளிற்கு வழங்கப்பட்ட பிறந்த நாள் பரிசு.இது அரசியலுக்குள்ளும்,ஊழலுக்குள்ளும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது.இதனால் மாணவர்களது கல்விகளும் சிறந்த முறையில் இடம்பெறுவதாக கூற முடியாது.இந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்காது போகின்ற போது அதன் பாவங்கள் அஷ்ரபை சென்றடையலாம்.இது தான் மு.கா அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா?
இரத்தத்தில் முளைத்த மு.காவை அவ்வளவு இலகுவில் யாராலும் அசைத்துவிட முடியாது.இருப்பினும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான கடந்த பதினாறு வருட காலமான மு.கா சமூகத்தின் நலனைக் கருத்திற் கொள்ளாது செயற்படுவதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தை விட்டும் மக்களால் விரட்டப்படும் நிலைக்குச் சென்றுள்ளது.அண்மைக்கலாமாக பாலமுனை,ஒலுவில் மக்கள் மு.காவினரை இடைமறித்தும்,கூச்சலிட்டு துரத்தும் நிலைக்கு வந்துள்ளமை இதனை தெளிவாக அறிந்துகொள்ளச் செய்கிறது.கிழக்கிற்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்யும் திட்டங்களோடு வந்த அமைச்சர் றிஷாதை அஷ்ரபின் நாமத்திற்காக பெற்ற வாக்கின் மூலம் அடைந்த பதவிகளைக் கொண்டு தடை செய்து கொண்டிருக்கின்றனர்.அமைச்சர் றிஷாதினால் சம்மாந்துறையில் கொண்டுவரப்பட்ட தொழில் பேட்டை மு.காவினர் தான் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்.மாவடிப்பள்ளி நூலகத்தை இயக்க நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர் றிஷாத் களமிறங்கிய போது அதனைத் தடுத்த மு.காவினரால் அச் சம்பவம் இடம்பெற்ற மாதமொன்று கழியப்போகின்ற போதும் இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.இது தான் அஷ்ரபிற்கு மு.கா செய்யும் கைமாறா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 21-09-2016ம் திகதி புதன் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 63 கட்டுரையாகும்