சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை முடிப்பதற்காகவே புழல் சிறை அதிகாரி மாற்றப்பட்டதாக தகவல்கள் பரபரக்கின்றன.
சென்னை புழல் சிறையில் முதல் பிரிவில் தண்டனைக் கைதிகள், இரண்டாவது பிரிவில் விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்போது இரண்டாவது பிரிவில் விசாரணை கைதிகள் 2300 பேர் உள்ளனர். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரும் விசாரணைக் கைதிகளுக்கான பிரிவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமையல் அறையில் இருந்த மின்வயரை கடித்து மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
விசாரணைக் கைதிகள் இருக்கும் சிறைக்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் சிறை அதிகாரி யாருமே இல்லை.
தண்டனை கைதிகள் சிறைப்பிரிவில் இருந்த கூடுதல் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணக்குமார் என்பவரை விசாரணை சிறைக்கைதிகள் பிரிவுக்கு மாற்றினர்.
திடீரென மாற்றம் செய்யப்பட்டது ஏன்?
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரை திடீரென மீண்டும் தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு மாற்றினர்.
தண்டனை கைதிகள் பிரிவில் இருந்த சிறை அதிகாரி ஜெயராமன் என்பவரை சில விசாரணை கைதிகள் இருந்த பிரிவுக்கு மாற்றி உள்ளனர்.
இதன் பின்னதான் ராம்குமார் மரணம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
ராம்குமார் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான ஜாமீன் மனுவுக்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டிருக்கிறார்.
19-ம் தேதி அவரது வழக்கறிஞர் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்வதாக இருந்தது. இந்த சூழலில்தான் அவரது மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.
ராம்குமார் கைது செய்யப்பட்டு 80 நாட்கள் கடந்திருக்கிறது. 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், செய்யாவிட்டாலும் விசாரணைக் கைதியாக இருப்பவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பிருக்கிறது.
ராம்குமார் வெளியே வருவதைத் தடுக்க அவரது மரணம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மரணத்தை நிகழ்த்துவதற்காக ஜெயிலர் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், கிருஷ்ணகுமார் மாற்றத்துக்கு வேறு சிலர் புதிய காரணங்களும் சொல்கிறார்கள்.
பணமோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து விசாரணைக் கைதியாக புழலில் அடைக்கப்பட்டார்.
அப்போது கிருஷ்ணகுமார் அவருக்கு சில சலுகைகள் செய்ததாகக் குற்றசாட்டு எழுந்ததாம். இதனால்தான் கிருஷ்ணகுமார் மாற்றப்பட்டார் என்கிறார்கள்.
இந்த நிலையில் சிறை தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணதாசன் கூறுகையில்,
பாதுகாப்பு மிகுந்த சிறையில், ராம்குமார் மர்மமான முறையில் இறந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விசாரணைக் கைதிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறை அறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தங்களுடைய பிளாக்குக்குள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
தங்கள் பிளாக்கில் இருக்கும் யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். அங்கிருக்கும் நூலகத்துக்குப் போகலாம். புத்தகம் படிக்கலாம். சிலர் சமையல் அறைக்குக் கூட செல்வார்கள்.
ராம்குமாரை அப்படித் திறந்து விட்டபோதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சி செய்த ராம்குமாரை, கூடுதல் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமே?
உண்மைதான். ராம்குமாரை ஒரு மாதம் வரை கண்காணிப்பில் வைத்திருந்தனர். தன்னை மட்டும் வழக்கத்தை விடக் கூடுதலாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே ஒரு கைதிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ராம்குமார் சிறைக்கு வந்த ஒரு மாதத்தில் பிற கைதிகளைப் போல இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.
எனவே, சிறை அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பை தளர்த்தியிருக்கக் கூடும். பிற கைதிகளைப் போல வழக்கமான கண்காணிப்பில்தான் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், ராம்குமார் உள்ளுக்குள் மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறார். அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மன உளைச்சலில்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
ராம்குமார் மரணம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்று சொல்கிறார்களே?
இல்லை. அது போல நடக்க வாய்ப்பு இல்லை. கைதிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டால். எப்படி வேண்டுமானாலும் தற்கொலை செய்து கொள்வார்கள்.
சிலர் உட்கார்ந்த நிலையில் போட்டிருக்கும் சட்டையை கழற்றி அதைக் கழுத்தில் இறுக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
கோவை சிறையில் 2010-ம் ஆண்டு ஒருவர் டிரான்ஸ்பர்மில் ஏறி வயரைப் பிடித்துத் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் சிறையில் ஒருவர் பாத்ரூம் கழுவ வைத்திருந்த கெமிக்கலை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது போன்று அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே, இதனைத் தடுக்க சிறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– Vikatan