மறிச்சிக்கட்டி விவகாரத்தில் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘மரண மௌனம்’ சாதிப்பது ஏன்..? மசூர் மௌலானா !

????????????????????????????????????

எம்.வை.அமீர்

’மரத்தால்விழுந்தவனை மாடு மிதிப்பதைப் போல’ மூன்று தசாப்த காலம் நீடித்த கோர யுத்தத்தில் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்த வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை கேள்விக்குட்படுத்துகிற நாட்டில் நிலையான சமாதானத்தையும்,இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நேசிக்காத இனவாதம் கக்கும் பச்சோந்தி அரசியலவாதிகளையும், தார்மீகப் பொறுப்பை மீறிச் செயற்படும் ஒருதலைப்பட்சமான ஒரு சில ஊடகங்களினதும் பொய்முகத்தை அம்பலப்படுத்தும் காலம் வெகுதூரமில்லையென்றே நினைக்கிறேன் என இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியும் மனித நேயமும் நிறைந்த ஆட்சியில் வில்பத்து சரணாலயத்தில் வாழும் மிருகங்களுக்கு காட்டும் அன்பைக் கூட சுய நல அரசியல் கோமாளிகள் மனிதர்களுக்கு மறுப்பது வேடிக்கையானதும் வேதனையானதுமாகும். காலம் காலமாக சீவித்த தமது பூர்வீக நிலத்தில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட மக்களாக வட புல முஸ்லிம்கள் அன்றாடம் தத்தளித்து வருகின்றனர். 

அப்பிரதேசத்தில் நீண்டகாலம் வாழ்ந்ததற்கான சட்டபூர்வமான ஆவணங்கள் அம்மக்களிடம் ஏலவே இருக்கின்றன. எனவே அதனை ஆராயாமலும்,பொருட்படுத்தாமலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி ஏழை முஸ்லிம்களை துன்புறுத்துவது எந்த வகையில் நியாயமாகும்?  என கேட்டுக்கொண்டார்.

ஏனைய விடயங்களில் ’மறிச்சிக்கட்டிக் கொண்டு’ நிற்கும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளும், அறிக்கை மன்னர்களும், காகிதப் போராளிகளும், ஏனைய ’சமூக நல ஆர்வலர்கள்’ எனச் சொல்லிக் கொள்கின்றவர்களும் மன்னார் மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் விடயத்தில் ’மரண மௌனம்’ சாதிப்பது மிகுந்த மன உளைச்சலையும்,துயரத்தையும் தருகிறது. 

ஒரு முஸ்லிமுக்கு அநீதி இடம்பெறும் தருணத்தில் சக முஸ்லிம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் இஸ்லாமியர்கள் எனும் அர்த்தத்தை சிதைக்கிறது. அமைச்சர் ரிஷாத் பதியூதீன் அவர்களைத் தவிர வேறெந்த முஸ்லிம் தலைவர்களும் வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் குறித்து இதுவரை குறிப்பிடத்தக்க குரலெழுப்பவில்லை. 

அமைச்சர் ரிஷாட் மன்னாரின் மைந்தர் என்பதற்காக அவர்தான் இவ்விடயத்தில் பாடுபடவேண்டும் என ஏதாவது விதி இருக்கிறதா என நான் யோசிக்கிறேன். முஸ்லிம்கள் எனும் அடிப்படையில், நடைபெறும் இந்த அநீதிக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். குறுகிய அரசியல் தேவைகளுக்காக எமது சமூகத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் மௌனம் சாதித்துத் கொண்டிருப்பது ஆரோக்கியமான சிந்தனைப் போக்கல்ல. 

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்களுக்கு இவ்விடயத்தில் நாம் அனைவரும் கை கொடுத்து உதவ வேண்டும். இவ்விடயத்தை பூதாகரமாக்கும் இனவாத ஊடகங்களின் முகத்திரையை கிழித்து இது முஸ்லிம்களுக்கான பூர்வீக பூமி என்பதை அனைவருக்கும்வெளிப்படுத்த வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் என என கேட்டுக்கொண்டார்.