ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு செல்வதை தவிர்த்திருக்கலாம் : நாமல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்தவர்களை விடவும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் அதிகமான மக்கள் வருகைத் தந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு செல்வதை தவிர்த்திருக்கலாம் என கட்சி அபிமானிகள் கருதுவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர கட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரே வருகைத் தந்ததாகவும், அதேபோல் அவர்களது ஆண்டு நிறைவுக்கும் எமது கட்சியின் செயலாளரை மட்டுமே அனுப்பியிருக்க வேண்டும் என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி தனது உரையை ஆரம்பித்த போதே ஐக்கிய தேசிய கட்சியினருக்கு நன்றி தெரிவித்தே ஆரம்பித்தார்.

2020இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே ஆட்சியமைக்கும் என குருணாகலில் தெரிவித்த ஜனாதிபதி கெம்பல் பார்க் மைதானத்தில் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றும் நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.