இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோர்தான் சிறந்த வீரர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேர்களில் யார் சிறந்தவர் என்ற விவாதம் தற்போது நிலவி வருகிறது.
இந்நிலையில் விராட் கோலி குறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘விராட் கோலி சிறந்த வீரர். அவருடைய திறமையால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விராட் கோலியை விளையாடுவதை நான் பார்க்க ஆசைப்படுவேன். அவரது விளையாட்டில் இருந்து நான் கற்றுக் கொள்கிறேன். இதை உறுதியாகச் சொல்கிறேன். அவரை நான் பாராட்டுகிறேன்.
அதேபோல் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோரும் சிறந்த வீரர்கள்தான். நாங்கள் அனைவரும் மாறுபட்ட வீரர்கள். அதேபோல் மாறுபட்ட திறன்களை உடையவர்கள். எங்களுடைய சொந்த ஆட்ட நுணுக்கங்களை கொண்டு விளையாட முயற்சி செய்கிறோம். ஒவ்வொருவரும் மாறுபட்ட விஷயங்களை செய்ய முடியும். அதன்மூலம் வெற்றி பெற முடியும்’’ என்றார்.