பொறுப்புக்கூறல் பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகள், வழக் கறிஞர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும்.
எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது என்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது.
உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத் திற்குட்பட்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டும்.
பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையைக்கண்டறியும் நிறுவனத்தை உருவாக்குங்கள். இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா. செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஹெபியஸ் கோபஸ் முறைமை விடயத்தில் நீதிமன்றநீதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் எனவும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்வர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 9ம் திகதி முதல் 18ம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்திருந்த ஐ.நா. செயற்குழு தற்போது தமது அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் முன்வைத்திருக்கிறது.
ஐ.நா. செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை மொத்தமாக 85 அம்சங்களை கொண்டுள்ளது. அதில் 77 முதல் 85 வரை பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐ.நா. செயற்குழு முன்வைத்த பரிந்துரைகளின் விபரம் வருமாறு:-
பொதுவானவை77 (அ) கண்காணிப்பு, அச்சுறுத்தல், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள், காணாமல் போனோரின் உறவினர்களை துஷ்பிரயோகம் செய்தல், உள்ளிட்டவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுடன் கட்டளைகளையும் அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும்.
(ஆ) எமது ஐ.நா. செயற்குழுவை சந்தித்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்
(இ) இவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய விடயங்கள் என்பதை அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்.
78 (அ) காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு ஐ.நா. செயற்குழுவிற்கு இருக்கின்ற அதிகாரத்தை அங்கீகரிக்கவேண்டும்.
(ஆ). ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவேண்டும்.
(இ). தாமதிக்காமல் காணாமல் போனோர் தொடர்பில் பரந்துபட்ட சட்டத்தன்மையை உருவாக்கவேண்டும்.
(1) காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கு ஒரு நடைமுறை முன்னெடுக்கப்படவேண்டும்.
(2)தேசிய மட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பில் விரிவான பதிவு அவசியம்.
(3) இந்தப் பதிவுகள் காணாமல் போனோரின் உறவுகள், சட்டத்தரணிகள், மனித உரிமை பாதுகாப்பாளர்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
(4) காணாமல் போனோர் தொடர்பில் பிரகடனம் அவசியம்.
(5) காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பும் உதவியும் வழங்கவேண்டும்.
(6) நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கான உறுதி வழங்கப்படவேண்டும்.
(8) பாதிக்கப்பட்டோர் உண்மையக் கண்டறிவதற்கும் நீதியைக் கண்டறிவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தி காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்கவேண்டும்.
(9). காணாமல் போனோர் தொடர்பில் சான்றிதழ் வழங்குவதற்கு முன்னர் காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு காணப்படுகின்ற சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் அவசியம்.
(ஈ) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றங்களை வேறுவகையில் ஆராயவேண்டும். குறிப்பாக அனைத்து மக்களையும் பலவந்தமான காணாமல்போனதிலிருந்து பாதுகாத்தல் பிரகடனத்திற்கு அமைய இவை ஆராயப்படவேண்டும்.
(உ) உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்குட்பட்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டும்.
(ஊ) சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை மீளாய்வு செய்யவேண்டும். அதுமட்டுமன்றி சாட்சியாளர்களின் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முழுமையான சுயாதீனத்தை அரசாங்கம் வழங்கவேண்டும்.
(எ) காணாமல்போனோர் தொடர்பாக புதிதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் சரியான முறையில் பொலிஸாரினால் விசாரிக்கப்படவேண்டும்.
(ஏ) சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.உண்மையைக் கண்டறிதல்
79.(அ) உண்மையைக் கண்டறியும் விடயத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பான அனுகுமுறை அவசியம்.
(ஆ) காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அனைத்து விதமான அனுமதிகளும் அவசியம்.
(இ) இது தொடர்பான ஆவணங்கள் மும்மொழிகளிலும் அமையவேண்டும்.
(ஈ). இந்த முழுமையான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான பொருட்கள், நிதி, மனிதவளத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
(ஊ) சடலங்களை மீண்டும் தோண்டுவதற்கு தடையவியல் விசாரணைகளை மேற்கொள்ள , தொழிலுட்ப வல்லமையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
(எ) அனைத்துக்கட்டங்களிலும் உளவள உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.(ஏ) இந்த விடயங்களில் ஒரு சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து செயற்படுங்கள்
80 (ஆ) காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான பரந்துபட்ட கொள்கையை உடனடியாக கொண்டுவாருங்கள்.
(இ) பாதிக்கப்பட்டோருடன் கலந்து ஆலோசியுங்கள், பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையைக்கண்டறியும் நிறுவனத்தை உருவாக்குங்கள். இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
(ஈ). உண்மையைக் கண்டறியும் சர்வதேச உதவியை நீதியை நிலைநாட்டும் நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் பொறிமுறைக்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலிங்கள்.
81(அ) சுயாதீன நிபுணத்துவமிக்க நிபுணர்களை உண்மைக்கண்டறியும் ஆணைக்குழுவிற்கு இணைத்துக் கொள்ளுங்கள்.
(ஆ) இந்த செயற்பாட்டுக்கும் சிவில் சமூகத்திலிருந்து பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளுங்கள்.
(இ) அனைத்துத் தரப்பினருடனும் பரந்துபட்ட ஆலோசனைகளை நடத்துங்கள்(ஈ) இதற்கு தேவையான நிதியுதவிகளையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
(ஊ) உண்மைக்கண்டறிவதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக தடவியல் நிபுணர்களின் உதவிகளைப் பெறலாம்.
82.(அ) காணாமல் போனோர் குறித்து விசாரித்த ஆணைக்குழுவிற்கு கிடைத்த அனைத்து முறைப்பாடுகளையும் சுயாதீன உண்மைக்கண்டறியும் நிறுவனத்திற்கு மாற்றிவிடுங்கள். இந்த நிறுவனமானது காணாமல்போனோரின் குடும்பத்தினருடன் ஆலோசித்து உருவாக்கப்படவேண்டும்.
(ஆ). முன்னைய ஆணைக்குழு மேற்கொண்ட விடயங்களை ஒரு ஆரம்பகட்டமாக கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
(இ). காணாமல்போனோரின் உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிறுவன ரீதியான நடவடிக்கை அவசியம். பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் (ஏற்கனவே சாட்சியமளித்தோர்) பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
(ஈ). மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் அவசியம்.
(உ) இந்த மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் விசேட திறமையுள்ளோரை ஈடுபடுத்திசோதனை நடத்த வேண்டும். . இதன்போது மரபணு பரிசோதனை, தடவியல் விசாரணை போன்றவற்றுக்கான வளங்கள் அவசியம்.
(ஊ). முறையான விசாரணை நடத்துவதற்காக குறிப்பிட்ட இடங்களை பாதுகாக்கவேண்டும். குறிப்பாக மாத்தளை, மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணைகள் மீள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
(எ). மரபனுப்பரிசோதனை இரசாயணக்கூடத்தை பலப்படுத்த வேண்டும். அது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் நிறுவனங்களிலிருந்து சுயாதீனமாக செயற்படவேண்டும்.
(ஏ) இது தொடர்பில் சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பரிசீலியுங்கள்
(ஐ) காணாமல் போனோர் தொடர்பில் உடனடியாக இராணுவத்தின் களஞ்சியங்களை திறந்து பாருங்கள்
83. நீதி(அ). நீதி வழங்கும் செயற்பாட்டில் பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும்.
(ஆ). காணமல் போனோர் குறித்த குற்றவிசாரணைகள், உயர்ந்தமட்ட நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படவேண்டும்
(இ) எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது.
(ஈ) பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறை தொடர்பில் அனைத்துக் கட்டங்களிலும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தகவல்களை வழங்கவேண்டும்.
(உ). தொழில்சார் நிபுணத்தவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொறுக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும்.
(ஊ). காணாமல் போனோர் குறித்த அனைத்து முறைப்பாடுகளையும் சட்டத்தின் முன் கொண்டுவாருங்கள். சம்பந்தப்பட்டவர் யார். எந்த நேரத்தில் குற்றமிழைக்கப்பட்டது என்று பாராமல் அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவாருங்கள்.
(எ). வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்றங்கள் காணாமல் போனோர் குறித்த அனைத்து முறைப்பாடுகளையும் விசாரிப்பதற்கான வல்லமையை கொண்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
(ஏ). கட்டளையிடும் பொறுப்பின் கீழ் செயற்பட்டவர்கள் தொடர்பிலும் ஆராயப்படுதல் வேண்டும்.
(ஐ). அனைத்து விசாரணைகளும் முறையாக இடம்பெறவேண்டும். குறிப்பாக இந்த சம்பவம் ஏன் நடைபெற்றது. எங்கு நடைபெற்றது என்பது தொடர்பான அனைத்து விபரங்களும் அவசியம்.
(ஒ). விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து சூழ்ச்சியாளர்கள் குறித்து ஆராயவேண்டும்.
(ஓ). விசாரணை செய்யும் விசாரணை அதிகாரிகளுக்கு நியாயாதிக்கத்தன்மை மற்றும் விஞ்ஞான வளங்கள் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்.
(ஔ). நீதி பொறுப்புக்கூறல் பொறிமுறையில் ட்ரயல் முறைமை மீள்முறையீட்டு முறைமை என்பவற்றை உள்ளீர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான உதவி செய்யும் பிரிவு பிரதிவாதப் பிரிவு, சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் பிரிவு என்பவற்றை உள்ளீர்க்கவேண்டும்.
(அஅ). நீதி விசாரணை செயற்பாடுகளின் போது பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் அதில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும். விளக்கமளித்தல் மற்றும் தண்டனைப்பொறுப்பு நட்டஈடு பெறுதல் போன்ற விடயங்களில் இந்த சந்தர்ப்பம் அளிப்பது மிகவும் அவசியமாகும்.
(ஆஆ). பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு குற்றவிசாரணைகளின் போது சுயாதீனம், சட்டத்தரணிகள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.
(இஇ).ஹெபியஸ் கோபஸ் முறைமையின் கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.
84.நட்டஈடு வழங்குதல்(அ) . பாதிக்கப்பட்டோருக்கு விசேடமாக சிறுவர்கள், பெண்களுக்கு நட்டஈடுகளை வழங்குவது தொடர்பில் அவசரகால நிலைமையின் கீழ் தேசிய நட்டஈட்டுக்கொள்கையை அரசாங்கம் தயாரிக்கவேண்டும்.
(ஆ). தேவையான குடும்பங்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழை வழங்கவேண்டும்.
(ஈ). சிறப்பான உளவியல் ஆலோசனை உதவி தொடர்பான நிகழ்ச்சித் திட்டமொன்றை பாதிக்கப்பட்டோருக்காக முன்னெடுக்கப்படவேண்டும்.
(உ). பாதிக்கப்பட்டோருக்கு சமூக கொடுப்பனவுகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படவேண்டும். பொருளாதார ரீதியிலும் காணாமல் போனோரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும்.
(ஊ). காணாமல் போனோரின் பிள்ளைகளின் கல்வித் தேவையை நிறைவு செய்ய நடவடிக்கை அவசியம் விசேடமாக காணாமல்போனோரின் பிள்ளைகளுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம் அவசியம்.
(எ). காணாமல் போனோரின் உறவினர்களுக்கான முறையான மீள்குடியேற்றத் திட்டமொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
(ஏ). பாதிக்கப்பட்டோர் அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி நினைவு நிகழ்வுகளை நடத்துவதை மதிக்கவேண்டும்.
(ஏ). நினைவுதினமொன்றை பிரகடனப்படுத்தி காணாமல் போனோர் தொடர்பாக நினைவுபடுத்தல் அவசியம்.
(ஐ). இவ்வாறான நினைவு தூபியை அமைக்கும் விடயத்தில் அனைத்துத்தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வடிவத்தை அமைக்கவேண்டும்.
85. இந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் 90 நாட்களில் எமக்கு தமது கருத்தை வெளியிட வேண்டியது அவசியமாகும்.