ஹக்கீமை நம்பவேண்டிய அவசியமில்லை, முஸ்லிம் சமூகத்திற்கு ஹக்கீம் செய்த பணி என்ன ?

FILE IMAGE

 

ஏ.எல் றியாஸ்

 

 வடக்கையும், கிழக்கையும் இணைத்து பாராளுமன்றத்திற்கு சமமானதொரு  அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்காக சிங்களப் பேரினவாதிகள் விரும்புகின்றவற்றை  வடகிழக்குக்கு வெளியே செய்துகொடுப்பதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாகிவிட்டதாக தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் ”சுதந்திர கிழக்கு” பிரகடனப் பொதுக்கூட்டம் டாக்டர் வை.எஸ்.எம் சியா தலைமையில் வெள்ளிக்கிழமை (9) மூதூர் பிரதான வீதியில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

athaulla

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கையும் கிழக்கையையும் இணைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேதான் உள்ளனர். இந்த நாட்டின் பாராளுமன்றம் அவர்களுக்கு ஒருவிடயமல்ல வடக்கையும், கிழக்கையும் இணைத்து பாராளுமன்றத்திற்கு சமமானதொரு  அதிகாரத்தை தாங்கள் எடுத்துக்கொண்டால் வட,கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற தமிழர்களைப் பற்றியோ அல்லது முஸ்லிம்களைப் பற்றியோ பாராளுமன்றத்தைப் பற்றியோ அவர்கள் யோசிக்கவில்லை. தொகுதி ரீதியான பிரச்சினைகள் வந்தபோது அதில் அவர்கள் தலையிடவில்லை ஆனால் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதுவிருப்பமோ அதனை வடகிழக்குக்கு வெளியில் செய்துகொடுப்பதற்கும் ஆயத்தமாகிவிட்டார்கள்.

இன்று அரசாங்கம் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பை மாற்றுவதற்கான ஒரு சபையாகவும், தேர்தல் முறையை மாற்றுவதற்காக ஒரு சபையாகவும் மாற்றியிருக்கின்றார்கள். குறிப்பாக இந்த சூழ்நிலையில்தான் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இக்காலப்பகுதியிலேதான் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

 பாராளுமன்றத்திலே அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என நீங்கள் என்னிவிடலாம் நீங்கள் விளங்குவதற்காக நோர்வேயினுடை ஒப்பந்தத்தை உங்களுக்கு விளக்கமாகக் கூறினேன் அதே நோர்வேதான் இப்போதும் இருக்கின்றது நோர்வேக்காரர்கள்தான் பிரதமருடைய ஆலோசகர்களாகவும் இருக்கின்றார்கள். 

இவர்களினால் இனத்தீர்வு தொடர்பான விடயம் மாத்திரமல்ல அதற்கு முதல் இன்னுமொரு முக்கியமான விடயமும் நடக்கப்போகிறது குறிப்பாக தொகுதி ரீதியான தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கும் நோர்வேக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் தங்களுடைய கட்சிகளை நிலைநிறுத்துவதற்கும் பெரும்பான்மை மக்களிலிருந்து அதிகமானவர்கள் பாராளுமன்றம் செல்வதற்குமான ஏற்பாடுகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தொகுதிகளைக் குறைத்து அங்கத்தவர்களை வேறுவிதமாகக் கூட்டி வட கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்கின்ற ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்களாகிய  நாங்கள் கேட்கின்றோம் ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டாம் சிறுபான்மை மக்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்கின்ற போது ஜனாதிபதியை மாற்றுவதற்கும் ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கும் முடியும் என்கின்ற அதிகாரம் எங்களிடத்திலே இருக்க வேண்டும். 

அதுதான் சிறுபான்மை சமூகத்திற்கிருக்கின்ற பாரியதொரு அதிகாரமாகும் அந்த அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டாம். இது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் தேவைப்பட்டது. அதே போன்றுதான் தொகுதிகளை குறைக்க முற்பட வேண்டாம் வட,கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற விடயத்திற்கும் தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக முழு நாடும் ஒரு பார்வையில் பார்க்கின்றபோது வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களுள் 1/3 பகுதியினர்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்று நாங்கள் மிகத்தெளிவாக சொன்னதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். வடகிழக்குக்கு வெளியே வாழுகின்ற 2/3பகுதி முஸ்லிம் மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அது மிக முக்கியமான விடயமாகும்.

 வட,கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இன்றும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இனவாதம், பொதுபலசேனா என்று எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இவைகளெல்லாம் யார் உருவாக்கினார்கள் என்பது ஒரு பிரச்சினை அந்த மக்களைப் பாதுகாப்பதற்காகவே கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறினோம்.  

இந்த நாட்டிலே  பொதுபலசேனா என்றொரு இயக்கம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் ஏசிக்கொண்டிருக்கின்றார்கள் சிங்கள மக்களையும், பௌத்த குருமார்களையும் கொன்று குவித்த விடுதலைப்புலிகளுக்கு ஏன் ஏசவில்லை அண்மையிலே யாழ்பானத்திலே பௌத்த சிலை உடைக்கப்பட்ட போதும் பொதுபலசேனா பேசவில்லை என்றால் ஏன் நாம் இதனைப்பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்து தாக்குவது ஏன் இந்த இடத்திலேதான் நாங்கள் டயஸ்போரா மற்றும் நோர்வையிலே சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. 

குறிப்பாக இதனை ஏன் கூறுகின்றேன் என்றால் யாரும் களத்திலே இறங்கி நாடுகளைப் பிடிப்பதில்லை அமெரிக்காவும் நேரடியாக சதாம் உசையினைப் பிடிக்கவில்லை , லிபியாவிலும் கடாபியை பிடிக்கவில்லை உள்நாட்டக்குள் கலவரங்களைத் தூண்டி அங்கே இருக்கின்ற தலைவர்களுக்கு எதிராக குழுக்களை உருவாக்கி ஆயுதங்களையும் கொடுத்து பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு அந்தநாட்டுத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள்.

 அதே போன்றுதான் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் கலவரங்களை உருவாக்குவதாக இருந்தால் ஒருகுழு உருவாக வேண்டும் . அதனை நோர்வே அரசாங்கம் கடல் கடந்த விடுதலைப்புலிகளையும், பொதுபலசேனாவையும் பேசி வழியனுப்பிய கதை இப்போது வெளியாகியுள்ளது.

.நாளை இந்த நாட்டிலே முஸ்லிம் சிங்கள இனக்கலவரங்களை ஏற்படுத்திவிட்டு சிங்களவாகளோடு வாழ முடியாது வாருங்கள் வட,கிழக்கை இணைத்துவிட்டு தமிழர்களோடு சேர்ந்து வாழுவோம் என்றதொரு நிலை தேற்றிவிப்பதற்காகவும் இதனை இயக்குகின்ற வெளிசக்திகள் இருக்கின்றது.

ஆகவே நாம் ரவூப் ஹக்கீமை நம்பவேண்டிய அவசியமில்லை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் என நீங்கள் யாரும் இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு மாத்திரம் சொந்தனமானதல்ல தாருஸ்ஸலாம் உட்பட தலைவர் அஷ்ரப்பால் உருவாக்கப்பட்ட அத்தனையும் முழு முஸ்லிம்களுக்கும் சொந்தமானது.

தலைவர் அஷ்ரபின் மரணத்திற்கு பின்பு ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த பணி ஒன்றைச்சொல்லுங்கள் அவர் செய்தது மக்களுடைய உணர்வுகளைத் தூண்டி கிழக்கிலே வாழுகின்ற மக்கள் ஹர்த்தால் செய்கின்ற நிலமையை ஏற்படுத்தி தரைப்படைகளோடு முஸ்லிம் இளைஞர்கள் போரிடுகின்ற ஒரு நிலையை உருவாக்கினார். இவ்வாறு மக்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டி நேரம் வருகின்ற போது அவர்கள் வாக்குகளைப் பெறுவதற்கு மாத்திரம்தான் இருந்தார்கள் தவிர வேறெதுவுமே செய்யவில்லை

அரசியல் ரீதியாக என்ன செய்திருக்கின்றார்கள் இப்போது சிந்தித்துப் பார்ப்போம் என யாரும் என்னிவிட வேண்டாம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பாரிய வெடிப்பு 2002, 2003 ஆம் ஆண்டுகளில் எவ்வாறு ஏற்பட்டதோ அதேபோன்று ஹக்கீம் யார் என்பது பற்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், செயலாளரும் இன்று வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

குறிப்பாக கட்சிக்குள் அவர்கள் முரன்பட்டது வெளியாகிவிட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கும் முஸ்லிம் மக்களை வைத்து பேரம் பேசி காசு பெற்ற விடயங்கள் வெளியாகியுள்ளது. தாருஸ்ஸலாம் பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிக்கிறது. 18ஆவது திருத்தச்சட்டத்திற்கு எவ்வளவு வாங்கியதென்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. தலைவரை அவருடைய குற்றங்களிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் மஹிந்தேவோடு சேர்ந்தோம் என்பதும் வெளியாகிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.