ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுக்க கல்கிசை நீதவான் அனுமதியளித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கல்கிசை நீதவான் முஹமட் சகாப்தீன் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை, வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை பற்றிய அறிக்கை, கொலை இடம்பெற்ற இடத்தில் இருந்து பெறப்பட்ட இரசாயன ஆய்வறிக்கை போன்றவற்றில் சிற்சில சிக்கல்கள் காணப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட காலமாக தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துவந்தனர்.
இதன்படி இது குறித்து அவதானம் செலுத்தி தொடர்ந்தும் தகவல்களை பதிவு செய்ய, சடலம் குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, நீதிமன்றத்தில் தகவலளித்ததற்கு அமைய சடலத்தை தோண்டி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் 27ம் திகதி லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க நீதவான் அனுமதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.