கிழக்கின் எழுச்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகிச் செல்கிறதா?

கிழக்கின் எழுச்சியின் செயலாளருடனான நேர்காணலிலிருந்து, 
 
கேள்வி: கிழக்கின் எழுச்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகிச் செல்கிறதா?
 
பதில்: இல்லை. கிழக்கின் எழுச்சியின் நோக்கம் மு.கா வின் தலைமைய கிழக்கிற்குக் கொண்டு வருவதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குக் காத்திரமான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது. 
மு.கா வில் அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமகளை உள்வாங்கி ஒரு தலைமைத்துவ சபையை உருவாக்குமாறு கோருகின்றோம். 
 
இச்சபையால் தேர்ந்தெடுக்கப்படுபவர் தலைவராக இருப்பார். தலைமைத்துவ சபைக்குப் பொறுப்புக்கூறும் தலைவராக அவர் இருப்பார். அவரில் நம்பிக்கையீனம் ஏற்படுமிடத்து தலைமைத்துவ சபை அவரை நீக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். 
 
மு.கா வை தாய்க்கட்சியாக கொண்டிருக்கும் ஏனைய தலைவர்களையும் உள்வாங்கி இதை பலமிக்க ஒரு அமைப்பாக மாற்ற முடிந்தால், அது முஸ்லிம்களின் அபிவிருத்தி , சுய நிர்ணயம் போன்ற விடயங்களில் பங்களிக்கக்கூடிய மிகவும் பலமான பேரியக்கமாக மாறும் என்பதை யோசித்துப் பாருங்கள். 
 
அது முடியாத சந்தர்ப்பத்தில் ஏனைய அனைத்து தலைமைகளுடனும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பலமான அமைப்பொன்றை உருவாக்க முயல்வது எனும் தீர்மானத்துடன் சமாந்தரமாக இரு தேர்வுகளிலும் முயற்சி செய்கிறோம். இதுவே உங்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகிச் செல்வது போல் தோற்றமளிக்கிறது. எந்த வழிமுறையாயிருந்த போதிலும் நோக்கம் ஒன்றுதான்.
 
மேலும் முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் காங்கிரஸைத் தவிர்த்து ஓரணியில் திரள்வது முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக இருக்கும். அதனால் அவர்கள் வழிக்கு வரவும் கூடும்.
 
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸைத் தவிர்த்து ஏனைய கட்சிகளைக் கொண்டு இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே?
 
பதில்: இல்லை, முஸ்லிம் காங்கிரஸ் என்பது இப்போதுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் தாய்க்கட்சி. மேலும் இன்னும் கணிசமான மக்கள் அக்கட்சியுடன் இணைந்துள்ளனர். பல பாமர மக்கள் தமக்கு இக்கட்சி என்றாவது நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு தொடர்ந்தும் வாக்களித்துக் கொண்டு இருக்கின்றனர். அடுத்தது இந்த கட்சிக்கு அதிகமாக வாக்களிக்கும் மக்களிடம் இதன் தலைமை இருக்க வேண்டும் என்பதும் ஒன்று.
 
கேள்வி : மக்களிடம் இதைக் கொண்டு செல்வது எந்தளவில் வெற்றி பெற்றிருக்கிறது?
 
பதில் : மிகக் குறைவான ஒரு காலத்திற்குள் கிழக்கின் எழுச்சியை அரசியல்வாதிகள் மட்டத்திலும் பொது மக்கள் மட்டத்திலும் ஒரு பேசு பொருளாக்கியிருக்கிறோம். இன்னும் இதை மக்களிடம் கொண்டு செல்ல நோட்டீஸுகள், போஸ்டர்கள், பொக்கெட் மீட்டிங்குகள் போன்றவற்றை ஒழுங்கு செய்து வருகிறோம். 
மு. கா தலைமைத்துவம் கிழக்கில் இருக்க வேண்டும் என்பதற்கு மக்களுக்கு அதிக விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாதிருப்பது, எந்தளவு மக்கள் தற்போதைய தலைமையில் சலிப்படைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
 
கேள்வி: கிழக்கிற்கு வெளியே தலைவர் இருப்பதில் என்ன பிரச்சினை? 
 
பதில் : ஒரு பிரச்சினையும் இல்லை. கடந்த பதினாறு வருடங்களாக கிழக்கிற்கு வெளியே இருந்த தலைவர், முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்லக்கூடிய ஒரு மாவட்டத்தையாவது உருவாக்கி இருக்கிறாரா? குறைந்த பட்சம் அவரது சொந்த மாவட்டத்திலாவது முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்ல முடியுமா?
கிழக்கிற்குள்ளாவது கட்சியை வளர்த்தெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. கிழக்கில் கட்சியின் வாக்காளர் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாக்குகளால் தொடர்ந்தும் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை அனுபவித்து வருகிறார். இதன் மூலம் கிழக்கு அடைந்த நன்மை என்ன? சொல்லும்படியான ஏதாவது அபிவிருத்தி நடந்துள்ளதா? 
 
இந்த முழு அமைச்சுப் பதவி கிழக்கில் ஹரீஸுக்கோ, பைசால் காசிமுக்கோ, மெளலானாவுக்கோ , தௌபீக்குக்கோ அல்லது மன்சூருக்கோ சுழற்சி முறையிலாவது வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய ஏதுவாகியிருக்கும். ஹகீம் அவர்கள் அதை முடக்கி வைத்துக் கொண்டு தானும் செய்வதில்லை, மற்றையவர்களையும் செய்ய விடுவதில்லை. இதனால் மக்களால் தெரிவாகும் உறுப்பினர்களுக்கும் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவரின் திறமைக் குறைபாடுதான் அவரிடமிருந்து கட்சியை மீட்கக் கோரும் முதல் காரணம். 
 
இரண்டாவது தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்பு மாற்ற விடயங்களில் கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் சுய நிர்ணயம் பற்றிய விடயங்களில் அந்த மண்ணைச் சேர்ந்த ஒருவராலேயே முழுவதுமாக இந்த விடயத்தை வென்று தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
 
16 வருடங்கள் எனும் நீண்ட காலத்தை அவருக்கு பிரதேசவாதம் பாராமல் ஆண்டு அனுபவிக்கக் கொடுத்தவர்கள் கிழக்கு மக்கள். அந்த நன்றிக் கடனுக்காவது அம்மக்களுக்கான பேரியக்கத்தை அவர்களிடம் கொடுத்துவிடுவதுதான் ஹகீம் அவர்களுக்கு அழகாயிருக்கும்.
 
கேள்வி : ஹகீம் அவர்கள் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறாரே, இது அந்த மக்கள் அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே ஆகிறது?
 
பதில்: இவரது தலைமைத்துவத்தை மக்களும் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டுதானிருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அவரது திறமைக் குறைபாடு கட்சியை பலவீனப்படுத்துவதுடன் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர் ஆர்வமில்லாதிருப்பதைக் கண்டு, தற்போது மாற்றம் வேண்டி நிற்கிறார்கள். 
 
முதலில் பாராளுமன்றத் தேர்தலில் ஹகீம் அவர்களும் பேரியல் அவர்களும் அதாவுல்லாஹ் அவர்களும் வென்றதனால் மக்கள் ஹகீமைத்தான் தேர்ந்தார்கள் என்று சொல்ல முடியாது? பின்னர் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் கோஷத்துடன் இறங்கினார்கள். 
 
ஆகவே அவரது தலைமைத்துவத்தை மக்கள் ஏற்கிறார்களா என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பாக, ஹகீம் அவர்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அம்பாரையில் போட்டியிட்டு வென்று காட்டுவாரா? முடியாது. அவரது செல்வாக்கு கிழக்கில் வெகுவாக சரிந்துள்ளதால் அவர் இந்த சவாலை ஏற்க அஞ்சுவார். இதுதான் உண்மை நிலவரம்.
 
கேள்வி: கிழக்கின் எழுச்சியில் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு பற்றி.
 
பதில்: அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், அதாவுல்லாஹ், ரவூப் ஹகீம், பஷீர் சேகு தாவூத், ஹஸனலி, ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் என்று வேறு யாராக இருந்தாலும், அவர்கள் யாருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலங்களில் இவர்கள் அனைவருமே தவறிழைத்துள்ளனர். இதை எல்லாம் இப்போது பேசி நேரத்தை வீணடிக்காமல்,
அவர்களது நல்ல விடயங்களை நாம் எடுத்துச் செல்வதில் எமக்குப் பிரச்சினையும் இல்லை. அவர்களை அளவுக்கு மீறி புகழும் அவசியமும் எமக்கில்லை. 
 
முஸ்லிம்களின் ஒற்றுமை அவசியாமாக கருதப்படும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சுய நலன்களுக்கப்பால் ஒன்றுபடுமாறு நாம் விடுத்துள்ள வேண்டுகோளை முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளேயும் வெளியேயும் பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களனைவரையும் ஓரணியில் திரட்டி பலமிக்கதோர் பேரம் பேசும் சக்தியை உருவாக்குவதிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம்.
 
கேள்வி : இவர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி நீங்கள் என்ன கோரிக்கையை முன் வைக்கப்போகிறீர்கள்?
 
பதில்: இதற்கு சுருக்கமாக பதில் சொல்வதாக இருந்தால், முஸ்லிம் தேசியத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதே எமது முதலும் முக்கியமானதுமான குறிக்கோள். இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலே ஏனைய விடயங்களை நாம் சாதித்துக்கொள்ளலாம்.
 
கேள்வி: முஸ்லிம்கள் ஒரு தேசியம் என்பதில் முஸ்லிம்கள் ஒருமித்த கருத்திலுள்ளார்களா?
 
பதில்: இது சிரமமான கேள்விதான். தாம் ஒரு தனித்தேசியமாக அடையாளம் காணப்படக் கூடிய தகுதிகளோடு உள்ளோம் என்பதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே தெளிவு இருக்குமா என்பதும் சந்தேகமே. ஆனால் வருங்காலங்களில் கிழக்கின் எழுச்சி இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாரிய பங்களிப்பைச் செய்யும்.
 
கேள்வி: ஒரு தேசியமாக கருதப்படக்கூடிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறுவதால், வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் ஒரு தேசியமாக கொள்ளப்பட முடியாதே?
 
பதில்: ஆம். ஒரு இனம் தேசியமாகக் கொள்ளப்படத் தேவையான அம்சங்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களை வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசியத்திற்குள் உள்வாங்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. தேசியமாக கருதப்பட்டு தீர்வொன்று தேவைப்படுவது வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முஸ்லிம்களுக்குத்தான்.
 
கேள்வி: இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவிக்காதா?
 
பதில் : இல்லை. எவ்வாறு பிரிவினை தோன்றும்? முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உம்மா என்ற அடிப்படையில் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மத ரீதியில் ஒரே சகோதரத்துவத்திற்குள் அடங்குகின்றனர். ஆனால் அரசியல் ரீதியான பிரிவுகள் வேறுபட்டவை. 
 
கேள்வி : அப்படியானல் ஹகீம் அவர்களைப் புறந்தள்ளியதா வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தேசியம்.
 
பதில் : முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் மு.கா வின் தலைமைத்துவ சபையில் உள்வாங்க வேண்டும் என்கிறோம். இதற்குள் ஹகீம் அவர்களும் உள்வாங்கப்பட இடமுண்டு.
 
ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தேசியத்திற்குள் ஹகீம் அவர்கள் வர முடியாது என்பதாலும் இதய சுத்தியோடு வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் விடயத்தில் நடந்து கொள்ள மாட்டார் என்று அனுபவத்தில் கண்டதாலும், இதற்குச் அவர் சரிவரமாட்டார் என்பதால் அவரைத் தவிர்க்கின்றோம்.
 
கேள்வி : மு. கா வின் தலமைத்துவத்தை வடக்கு கிழக்கிற்குள் கொண்டுவர முடியாது போனால்?
 
பதில் : மு. கா வின் தலைமைத்துவ சபைக்குள் வடக்கு கிழக்கு தலைமைகளை உள்வாங்க முடியாதவிடத்து, அவர்களனைவரையும் ஒரு கூட்டமைப்புக்குள் கொண்டு வந்து முஸ்லிம் தேசியத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். இறுதி இலக்கு பொறுப்புவாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்குவதே. 
 
கேள்வி : இக்கூட்டமைப்பு எவ்வாறு இயங்கும்? இதில் தலைமைத்துவ பிரச்சினைகள் எழ மாட்டாதா?
 
பதில் : இல்லை. இக்கூட்டமைப்பில் இணையும் கட்சிகள் தமது கட்சிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்கும். தேர்தலொன்றின்போது அவர்கள் விட்டுக் கொடுப்புக்களுடன் பேசி கூட்டாகவோ தனித்தனியாகவோ தமது வேட்பாளர்களை நியமிப்பார்கள். முஸ்லிம்களின் உரிமை அபிவிருத்தி போன்ற விடயங்களில் ஒற்றுமைப்பட்டு ஒரு பலமிக்க சக்தியாக இயங்குவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நபர்களிலிருந்து இதற்கு சுழற்சி முறையில் தலைவர் நியமிக்கப்படுவார்.
 
கேள்வி : உங்கள் முயற்சிக்குப் போதுமான ஆதரவு இருக்குமென்று எண்ணுகிறீர்களா?
 
பதில்: நாம் அழைப்பது சமுக ஒற்றுமையை முன்னிறுத்தி. இதில் ஆதரவளிக்காமல் போவதற்கு என்ன இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒற்றுமைப்படுமாறு நாம் விடுத்த வேண்டுகோளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமைச்சர் ரிஷாட், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், முன்னாள் அமைச்சர்களான பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி போன்ற பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பே இது இறுதி வடிவத்தை எட்டும்.
 
கேள்வி : இந்த நிலமைகளில் உங்கள் முன்னுள்ள சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?
 
பதில் : இத்தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்துவது முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளேயா அல்லது அதற்கு வெளியிலா என்பதுவே பெரும் சவாலானதாகும்.
 
கேள்வி : உங்களதுஅடுத்த திட்டம் என்ன?
 
பதில் : இப்போது முஸ்லிம் தேசியத்தின் முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனம் ஒன்றை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
இதனை கல்வியாளர்களைக் கொண்டு அரசியல்வாதிகளின் பங்கெடுப்புடன் செய்ய எண்ணியுள்ளோம்.
 
அதற்காக சகோதரர்கள் ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி , அமீர் அலி, போன்ற இன்னும் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். வருவதாகவும் பலர் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். 
 
கேள்வி : இது எவ்வாறு முக்கியத்துவம் பெறும்?
 
பதில் : முதலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்கள் கோருவது என்ன என்பதை அறுதியாக உரத்துக் கூறும் ஒரு நிகழ்வு என்பது.
 
இரண்டாவது, சமுகத்திற்காக என்று செய்யப்படும் ஒரு முக்கிய விடயத்தில், அரசியல்வாதிகள் அனைவரும், தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடத் தயாராக இருக்கின்றோம் என்பதை மக்களுக்குக் காட்ட முடியுமான ஒரு முக்கிய நிகழ்வாக இதை கருதுகின்றோம்.