தந்தையை இழந்த குடும்பத்தின் வாழ்வு பெரும்பாலும் பிள்ளைகளை நம்பியதாகவே இருக்கும். அதுவும் அங்கு மூத்த சகோதரனின் வகிபாகம் அதிகமாக இருக்கும். ஒருகட்டத்தில், மூத்தவன் வழிதவறிப் போகின்றதாக குடும்பத்தவர் பரவலாக அபிப்பிராயப்படுவார்களாயின், இளைய மகன்கள் வீட்டின் நிர்வாகத்தை கையிலெடுக்கக வேண்டிவரும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இளையவர்கள் – குடும்ப நலனிற்காகவோ, மூத்தவனுடனான போட்டியின் அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதைச் செய்ய வாய்ப்பிருக்கின்றது. ஏனென்றால் இன்றைய காலத்தில் பிள்ளைகளை நம்பமுடியாது. ஆனாலும், மூத்தவனின் சில வேலைகளால் இவ்வாறு இளைய பிள்ளைகளின் பக்கம் பார்வை திரும்புவதை தடுக்கவும் இயலாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்பு பற்றிய கருத்தாடல்கள் முஸ்லிம் அரசியலில் நிரம்பி வழிகின்றன. கடந்தவார கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்று, வடக்கில் வாழும் தமிழர்களைப் போலவே கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழர்களும் இந்த இணைப்பிற்கு கொள்கை அடிப்படையில் ஆதரவளிக்கின்றனர். சுமார் 10 வீதமானவர்கள் மட்டுமே இதனை மறுக்கின்றனர். கிழக்கிற்கு தனி ஒரு மாகாண சபை இல்லாது போவதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி கிழக்கு தமிழர்கள் அறிந்து கொள்வார்களாயின் இந்த வீதம் அதிகரிக்கலாம். மறுபுறத்தில், முஸ்லிம்கள் இவ்விணைப்பின் ஆழஅகலங்களை பற்றி பெரிதாக விளங்கிக் கொள்ளவில்லை என்றாலும் பொதுவில் இதனை எதிர்க்கின்றனர். கடந்தகால அனுபவத்துடன் அவர்கள் இதனை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம்களிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தாலும், வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி அவ்வாறான ஒரு ஒருமித்த உடன்பாடு இல்லை. இவ்விரண்டும் இணைக்கப்படவே கூடாது என்று பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். இணைக்கப்பட்டால் நிலத்தொடர்பற்ற மாகாணம் வேண்டுமென்றும் சமஷ்டித் தீர்வு வேண்டுமென்றும் இன்னுமொரு தரப்பினர் கோருகின்றனர். வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாமல் விடுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு நன்மை கிடைத்துவிடுமா? என்ற தர்க்கவியல் வாதமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான குழப்ப நிலைகளுக்கு காரணம் முஸ்லிம் கட்சிகளின் குறிப்பாக பிரதான முஸ்லிம் கட்சியின் திரிசங்குநிலையாகும்.
மூடுமந்திர போக்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்வுத்திட்ட விடயத்தில் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. எல்லாவற்றையும் மூடுமந்திரமாக வைத்திருக்கவே தலைவர் றவூப் ஹக்கீம் விரும்புகின்றார். அவர் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் (டயஸ்போராவின்) அஜந்தாவிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு அமையவும் செயற்படுவதாகவும் எத்தனையோ அத்தாட்சிப் படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தலைவர் ஹக்கீம் கடைசிக்கட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என்பது அவர் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும்.
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் அவரது விசிறிகள் விடுகின்ற அறிக்கைகள் கட்சியின் மனோநிலையை சாடைமாடையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டும் என்ற கோதாவிலேயே கட்சி உறுப்பினர்கள் பலர் பேசுகின்றனர். ஒரேயொருவர் அவ்வாறு நடக்காது என்று சொல்லியுள்ளார். இன்னுமொருவர் இணைக்கக் கூடாது என்று துணிச்சலாக பேசி இருக்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னுமொருவர், வடகிழக்கை இரண்டு மாகாணங்களாக பிரித்தவர் அதாவுல்லா என்று கூறியமை இரண்டு விடயங்களை வெளிக்காட்டுகின்றது. ஒன்று, வடக்கு கிழக்கை அதாவுல்லா பிரிக்கவில்லை. ஜே.வி.பி.யினர் வழக்கு ஒன்றின் ஊடாகவே பிரித்தனர் என்ற வரலாற்றை அவர் சொல்ல மறந்திருக்கின்றார். இரண்டாவது, பிரித்தவன் இனவாதி என்றால் சேர்ப்பவன் இன நல்லிணக்கவாதி என்ற கருத்தை, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மக்களிடத்தில் தெரிவித்து, அவர்களை நாடிபிடித்துப் பார்த்திருக்கின்றார். மறுபுறமாக, இணைப்பிற்கு எதிரான மக்களின்; மனங்களில் அதாவுல்லாவை ஹீரோவைப் போல சிருஷ்டித்திருக்கின்றார் என்றும் சொல்லலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றி மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். ‘இதற்கெதிராக போராடவும் தமது கட்சி தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் வடக்கும் கிழக்கும் தனித்தனியே இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. அக்கட்சியின் தலைவரான அதாவுல்லா எப்போதும் புலிகளுக்கு எதிராக துணிந்து பேசுபவராகவும் வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்தார். இவ்விரு மாகாணங்களையும் பிரிப்பதற்கு முன்னதாக ஜே.வி.பி.னர் தன்னிடம் வந்து ஆலோசனை பெற்றதாக அவர் கூறினாலும் வழக்குப் போட்டவர் அவர் அல்லர். அப்படியென்றால், மக்களின் மனங்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அதாவுல்லாவின் வீராப்பு பேச்சுக்களும் காரணமாகியிருக்கலாம் என்றாலும், கிழக்கை பிரித்தவர் அதாவுல்லா என்ற வார்த்தைப் பிரயோகத்தின் நேரடி அர்த்தம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
அதிகாரமிழந்த கதை
இந்த அதாவுல்லா, இப்போது அமைச்சருமில்லை, பாராளுமன்ற உறுப்பினருமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியுடன் சங்கமமாகி இருக்கின்ற ஒரு முஸ்லிம் கட்சி என்ற பலத்தையும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களை கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவர் என்ற பதவியையும் தவிர அவரிடம் எந்த அதிகாரங்களும் இல்லை. இவர் எவ்வாறு அதிகாரங்களை இழந்தார் என்பது யாவரும் அறிந்த விபரமே. புலிகளின் காலத்தில் கூட அவர்களை பகிரங்கமாக விமர்சித்தவர் இவர். ‘பிரபாகரன் பெரிய ஆள் இல்லை. துப்பாக்கி இருந்தால் நாங்களும் சுடுமளவுக்கு தைரியசாலிதான்’ என்று தேசிய தொலைக்காட்சியில் சொன்னவர். இப்பேற்பட்ட ஒருவர் இனவாதம் இலங்கை முஸ்லிம்களை ஆட்டிப் படைத்த காலத்தில் மிக மோசமான மௌனம் ஒன்றை கடைப்பிடித்தார். தனது விசுவாசியான ஜனாதிபதி மஹிந்தவை கொண்டு பொதுபலசேனா போன்றவற்றை அடக்கவும் இல்லை. இல்லாவிட்டால், அதற்கெதிராக அதாவது முஸ்லிம்களின் இனத்துவ, மதம்சார் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் இல்லை. ‘அதாவுல்லா பேச வேண்டிய இடத்தில் பேசுகின்றான்’ என்று சொல்லிச் சொல்லியே காலத்தை கடத்திவிட்டார்.
இதனால் ஆத்திரமுற்றிருந்த மக்களை – மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் முடிவொன்றின் மூலம் சற்று தணிய வைத்திருக்கலாம். ஆனால் அப்போதும் மஹிந்தவின் சால்வையில் தொங்கிக் கொண்டிருந்தார் அதாவுல்லா. அதற்குப் பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலாவது அவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை. முடிவு விபரீதமாக இருந்தது. ஒரு பெரிய முஸ்லிம் கட்சியை விட அதிக அபிவிருத்திகளைக் கொண்டுவந்து பல நூற்றுக் கணக்கானோருக்கு தொழில்களை வழங்கிய ஒருவரை மக்கள் சத்தமின்றி தோற்கடித்து பாடம்புகட்டினர். இந்த தோல்வி நிறைய விடயங்களில் அதாவுல்லா பட்டுத்தேறுவதற்கு வழிவகுத்திருக்கலாம்.
இந்நிலையில் அதாவுல்லாவுக்கு எம்.பி. கிடைக்கப் போகின்றது என்ற கதைகள் இரண்டு பருவகாலங்களில் உலாவந்தன. இரண்டாவது பருவகாலம் என்பது, தீர்வுத்திட்டம் பற்றி பேசப்படும் இன்றைய காலப்பகுதியாகும். எனது தனிப்பட்ட அனுமானத்தின் படி. தமிழர்களுக்கு முழுமையான தீர்வுத்திட்டம் அதாவது தமிழர்கள் எதிர்பார்ப்பதை அப்படியே வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் முன்வரமாட்டார்கள். முஸ்லிம்களை வைத்து சில தடங்கல்களை ஏற்படுத்தி ‘ஓரளவுக்கு திருப்தியான’ ஒரு தீர்வை வழங்குவதற்கே அரசாங்கம் நினைக்கும். இதற்காக மு.கா. தலைவரை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம். இருப்பினும் அவரது போக்குகளும் தமிழ் கூட்டமைப்புடனான அதீத உறவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சில சந்தேங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் பின்னணியிலேயே அதாவுல்லாவை புரமோட் பண்ணுவதற்கு சுதந்திரக் கட்சி நினைக்கலாம் என்று தோன்றுகின்றது.
இதன்மூலம் ஐ.ம.சு.முன்னணியை பலப்படுத்துகின்ற சமகாலத்தில் அதாவுல்லாவை ஒரு அழுத்த அரசியல்வாதியாக வைத்திருக்கவும் சிங்கள தேசியம் எண்ணியிருக்கலாம். மேலும், ஒருவேளை ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு கண்ணைமூடிக் கொண்டு ஆதரிப்பாராக இருந்தால், அதாவுல்லாவுக்கு எம்.பி. பதவியை வழங்கி கிழக்கில் மு.கா.வுக்கு எதிரான அரசியல் சமநிலையை கொஞ்சம் கனதியாக்கினாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்த வகிபாகத்தை ஹக்கீமே செய்வாராக இருந்தால் சிலநேரம் அதாவுல்லாவின் மவுசு, அரசாங்கத்திடம் குறைந்து போய்விடவும் வாய்ப்பிருக்கின்றது.
சுதந்திர கிழக்கு
இவ்வாறான பின்புலத்துடனேயே, ‘சுதந்திர கிழக்கு’ எனும் கோஷத்துடன் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டம் ஏறாவூரில் நடாத்தப்பட்டுள்ளது. அடுத்த அடுத்த கூட்டங்கள் கல்முனையிலும் அக்கரைப்பற்றிலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏறாவூர் கூட்டத்தில் அதாவுல்லா உரையாற்றுகையில் பல விடயங்களை தொட்டுப் பேசியிருக்கின்றார். ‘நப்சு (மனவிருப்பம்) கேட்கின்றது எனக்கு தலைமைப் பதவியை தாருங்கள் என்று ஹக்கீம் கெஞ்சினார். பதவியாசை பிடித்தவனுக்கு அதை வழங்கக் கூடாது என்று மறைந்த தலைவர் சொல்லியதையும் மீறி நானும் ஏனையவர்களும் அதைக் கொடுத்தோம்’ என்று ஒரு அடிப்படை தவறை பற்றி பேசினார். ‘போராடத முஸ்லிம்களுக்கு தீர்வில் என்ன பங்கு என்று கேட்டவர்கள்தான் தமிழ் அரசியல்வாதிகள்’ என்று கூறிய அவர், முஸ்லிம்களை வடக்கு, கிழக்கில் வாழும் ஒரு தனி இனமாகக் கூட அங்கீகரிக்காத சர்வதேசம் ஏன் கிழக்கின் மீது கண் வைத்திருக்கின்றது என்ற காரணங்களை சொன்னார்.
வடபுல அரசியல்வாதிகள் ஏன் கிழக்கை இணைக்கக் கோருகின்றார்கள் என்பதை தனது கோணத்தில் அவர் சொன்னார். பிரதான முஸ்லிம் கட்சியின் தலைமையிடம் டீல் பேசப்படுவதாக கேள்விப்படுவதாகவும் அதாவுல்லா கூறியுள்ளார்.
சுதந்திர கிழக்கு எனும் இந்த பிரசார நடவடிக்கையை வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய குரலாக பார்க்கின்றனர். இதை வைத்து அதாவுல்லா அரசியல் இலாபம் செய்கின்றார் என்று சிலரும், மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணி உள்ளது என்று சிறுகுழுவினரும் அபிப்பிராயப்படுகின்றனர். இந்த வேலைத் திட்டத்திற்குப் பின்னணியில் மறைமுக காரணங்கள் ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அதாவுல்லா தோல்வியுற்ற பின்னர் அவர் செயற்பாட்டு அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமன்றி தே.கா.வின் இயங்குதளமும் முடங்கிப் போயிருந்தது. எனவேதான் ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள’ தே.கா. தலைவர் நினைக்கின்றாரா? என்ற சந்தேகம் எழுகின்றது. இவ்வாறான கருத்துக்களும் எண்ணங்களும் ஏற்படுவது மிகவும் ஆரோக்கியமான விடயமே.
தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதிலும், தமக்கு ஒரு உப தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சிவில் சமூகம் மிக உறுதியாக இருக்கின்றது. அவ்வாறில்லாவிடின் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாதிருப்பதே நல்லது என்று பெருமளவான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதனை சர்வதேசத்திற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டியிருக்கின்றது. வடக்கில் பிறந்த எத்தனையோ அரசியல்வாதிகளும் கிழக்கில் பிறந்து வளர்ந்த எத்தனையோ அரசியல்வாதிகளும் இன்னும் உயிருடன் இருக்கத் தக்கதாக, வேறு எங்கோயிருந்து வருகின்ற ஒரு அரசியல்வாதி கிழக்கை இணைப்பதற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது. யாருடைய விருப்பத்திற்காகவும் கிழக்கில் வாழும் முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்கவும் முடியாது விற்றுக் கொடுக்கவும் இயலாது.
இதைச் சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் சகோதரர்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது எந்தளவுக்கு முக்கியமோ அதற்கு சமாந்திரமாக முஸ்லிம்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். டயஸ்போராவின் நிகழ்ச்சி நிரலுக்காகவோ தமிழ் தேசியத்தின் கனவுக்காகவோ, முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காகவோ கிழக்கு முஸ்லிம்கள் பலிக்கடாவாக முடியாது. இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
வடக்கு மாகாணத்துடன் இணைந்திருப்பதற்கு கிழக்கு தமிழர்கள் விரும்பினால் அதைத் தடுப்பதற்கு முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இணைந்த வடகிழக்கிற்குள் கிழக்கு தமிழர்கள் வேண்டுமென்றால் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்களை வற்புறுத்த முடியாது. அவ்வாறு இணைக்கும் உத்தேசம் இருந்தால் அது தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம் தலைமைகள், அரசியல்வாதிகளுடனேயே தமிழ் தரப்பும் அரசாங்கமும் கலந்து பேச வேண்டும் என்பதை உரத்த தொனியில் சொல்ல வேண்டும். அந்த வகையில், சுதந்திர கிழக்கும் அதாவுல்லாவும் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது.
எந்தவொரு பிரசார முன்னெடுப்பும் யாராவது ஒரு பரிச்சயமான அரசியல்வாதியால் முன்னெடுக்கப்படுமாயின், அது சோபை இழந்து போய்விடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். அப்படிப் பார்த்தால், இப்போதைக்கு கிழக்கிலுள்ள பணத்தாசை பிடித்த அரசியல்வாதிகளும், ஹக்கீம் என்றால் தொடை நடுங்குவோரும், சோம்பேறிகளும், சமூக சிந்தனையற்றவர்களும் இப்படி பகிரங்கமாக வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்து குரல் கொடுக்கமாட்டார்கள். இதனை கிழக்கில் இருந்து இப்போதைக்கு செய்யக் கூடியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே ஆவர். இன்னும் சிலர் இதற்குப் பின்னால் நின்று ஆதரவளிக்கின்றார்கள்.
அவரை பயன்படுத்தல்
அதற்காக, அதாவுல்லா புனிதர் என்றோ பெரிய சமூக அக்கறையாளன் என்றோ இங்கு குறிப்பிட வரவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா கோலோச்சிய போது அவர் கடைப்பிடித்த மௌனமும் மஹிந்த மீதான அளவுகடந்த நன்றிக்கடனும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தனது சமூகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் அவர் தனது நிலைப்பாட்டை அப்போதே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யாதது மறக்கக் கூடியது அல்ல. ஆனால், இதுபற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதற்கு இப்போது நேரமில்லை. மு.கா. தலைவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்லாமல் இருக்கின்ற வேளையில், அவர் இணைப்புக்கு ஆதரவளிப்பார் என்று பரவலாக பேசப்படுகின்ற சூழலில்… கிழக்கு முஸ்லிம்களின் குரலாகும் ஒருவரை புறந்தள்ளிவிட முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
அதாவுல்லா இதை வைத்து பிழைப்புவாத அரசியல் செய்கின்றாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது. அவர் அடிப்படையில் அரசியல்வாதி. அதுதான் அவருக்கு தொழிலும் கூட. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் அரசியல் செய்கின்றார் என்பதில் பெரிய மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், இது அதாவுல்லாவுக்கு என்ன மாதிரியான அரசியல் இலாபத்தை கொண்டு வரும் என்பதைப் பற்றி சிந்திக்காது, கிழக்கு முஸ்லிம்களுக்கு எவ்வாறான நன்மையை கொண்டுவரும் என்ற கோணத்தில் இதைச் சிந்திப்பது நல்லதென தோன்றுகின்றது. குறைந்தபட்சம் மு.கா. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான அழுத்தத்தையாவது இது கொடுக்கலாம். எனவே தமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, இச் சந்தர்ப்பத்தில் சுதந்திர கிழக்கை கிழக்கு மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகின்றது.
மறுபுறத்தில், முஸ்லிம்களின் அபிவிருத்தி அரசியலில் ஜொலித்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, உரிமை அரசியலில் பெரிய தவறுகளை விட்டிருக்கின்றார். அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடுவதாக சுதந்திர கிழக்கு பிரசாரம் இருக்க வேண்டுமே தவிர, மஹிந்தவுக்கு மறைமுக ஆதரவு தேடுவதோ, தனிப்பட்ட அரசியல் இலாபம் தேடுவதோ, ஹக்கீமையும் தமிழ் தலைமைகளையும் வசைபாடுவதோ இதன் நோக்கமாக இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், மிக சுலபமாக இதுவும் தோற்றுப் போய்விடும்.
மிக முக்கியமான விடயம், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில் எந்தப் பாதிப்பும் வந்து விடக் கூடாது. அவர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோன்று தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மு.கா. தலைவருடன் பேசினாலும் பேசாவிட்டாலும் கிழக்கில் பிறந்த முஸ்லிம் தலைமைகளுடன் கட்டாயமாக கலந்துபேசியே தீhவுகளை முன்வைக்க வேண்டும். அதைவிட்டு வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவரின் சம்மதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, கிழக்கை கொண்டுபோய் வடக்குடன் சேர்க்க முடியாது என்ற யதார்த்தம் இங்குள்ளது. மனோ கணேசன் அல்லது ஆறுமுகன் தொண்டமானுடன் கதைத்து விட்டு வடக்கை கொண்டுபோய் வடமத்திய மாகாணத்துடன் சேர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
வீட்டில் அண்ணன் சரியில்லை என்று அந்தக் குடும்பம் இறுதி முடிவெடுத்துவிட்டால், கதை வேறு மாதிரியாகிவிடும்.
ஏ.எல்.நிப்றாஸ்