100 மில்லியன் ரூபா செலவில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கோடி 20 இலட்சம் ரூபா பொறுமதியான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான மற்றுமொரு ஒப்பந்தம் mg medicals (pvt)ltd நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் mg medicals (pvt)ltd நிறுவனத்தின் முகாமையாளர் டிலான் அலாகொட மற்றும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கையில் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பல குறைபாடுகளை இணங்கண்டு அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்து வருகின்றது. அந்தவகையில், அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை 100 மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பல நிறுவனங்களடமிருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடந்த வாரம் gene diagnostics நிறுவனத்திடமிருந் து ஒரு கோடி 85 இலட்சம் ரூபா பொறுமதியான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது mg medicals (pvt)ltd நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக மேற்படி உபகரணங்கள் ஒரு மாத காலத்துக்குள் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.