யாழ் மற்றும் பொலன்னறுவையில் கிரிக்கெட் மைதானங்களை நிறுவுவதற்கு 200 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இரண்டு கிரிக்கெட் மைதானங்களை நிறுவுவதற்கு 200 மில்லியன் ரூபாயினை இலங்கை கிரிக்கெட் சபை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைதானங்களை யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் நிறுவ உள்ளதாகவும் ஒரு மைதானத்திற்கு ரூபா 100 மில்லியன் படி மொத்தமாக 200 மில்லியன் செலவாகும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டரங்கங்கள் நிறுவுவது தொடர்பிலான இடத்தை பொலன்னறுவையில் தெரிவு செய்துள்ளதாகவும் யாழில் மைதானம் அமைப்பதற்கான இடம் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் மோகன் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும்,விளையாட்டரங்கம் ஆரம்பிக்கும் பணிகள் பொலன்னறுவையில் தற்போது இடம் பெற்றுவருவதாகவும் இந்த வருட இறுதிக்குள் இரண்டு மைதானத்தினதும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறக்கூடிய முதல் தர விளையாட்டரங்கமாக இந்த இரண்டு கிரிக்கெட் மைதானங்களும் அமையும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் டி.சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.