பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் அமைவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கூட்டு அரசாங்கத்துக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
எமது பிரதான எதிரி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலை மேற்கொள்ள முடியாது. இந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்துவதே எமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைவதற்கான சாத்தியம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த தேசிய அரசாங்கத்தினூடாக அவசியமான அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்த முடிந்தமை உண்மையாகும். அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு தேசிய அரசாங்கம் கைகொடுத்தது. அதேபோல் 20ஆவது திருத்தச் சட்டத்தையும் இந்த அரசினூடாக நிறைவேற்றி அதன்பின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும்.
இதுவரைக்கும் தேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமே தவிர தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லை. பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைவதை நாம் விரும்பவில்லை. அனுமதிக்கப்போவதும் இல்லை. எனவே அடுத்த அரசாங்கம் தனிக் கட்சியின் அரசாங்கமாகவே அமைய வேண்டும்.
பிரதான இரு கட்சிகளில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும். ஆனால் அது மக்களின் ஆதரவை பெற்ற கட்சியாக இருக்க வேண்டும். இதுவரை நாட்களும் தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கம் அதிகரித்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே இன்று நடக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவை பெறாது பிரதமராக செயற்படுகின்றார். இது முரணான விடயமாக இருந்தாலும் நாம் இப்போது இந்த விடயங்களை விமர்சிப்பது அவசியமற்றது. வெகு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதனால் தேர்தலில் பலமான கட்சியாக போட்டியிட்டு ஆட்சியை ஜனநாயக ரீதியில் கைப்பற்றுவதே எமது இலக்காக்கும்.
அதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியினரே எமது பிரதான எதிரியாவார்கள். அவர்களை வீழ்த்தி பலமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். மீண்டும் நாட்டில் எமது அரசாங்கம் உருவாக வேண்டும்.அவ்வாறானதொரு போராட்டத்தில் ரணிலை இணைத்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் தலைவர், ஆனால் தேசிய அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்துள்ளார்.
எனவே இந்த அரசாங்கம் தற்காலிகமானது மட்டுமே. அதேபோல் நாம் அரசாங்கத்தில் பங்குதாரராக இருந்தாலும் எதிர்க்கட்சியாகவே செயற்படுகின்றோம். எனவே பொதுத் தேர்தல் வரையிலேயே இவை அனைத்தும் நிலைத்திருக்கும். தேர்தலின் பின்னர் ஜனாதிபதி, பிரதமரை உள்ளடக்கிய எமது அரசாங்கத்தை அமைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.