பி.எம்.எம்.ஏ.காதர்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளிவிட்டே வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டது இதனால் முஸ்லிம் சமூகம் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்துவந்தது.நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் துணைபோகாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை இரவு(01-09-2016)கல்முனையில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-வடக்கில் தமிழர் ஒருவரும் கிழக்கில் முஸ்லிம் ஒருவரும் முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்யும் நிலையில் கிழக்கு மாகாண சபையில்; தமிழர்.சிங்களவர்,முஸ்லிம் என மூன்று இனத்தையும் சார்ந்தவர்கள் அமைச்சர்களாக மக்களுக்குச் சேவையாற்றுகின்றனர்.
இந்த நிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து மூன்று இன மக்களின் சந்தோஷமான சகவாழ்வை சீர்குலைக்கத் தேவையில்லை.கிழக்கில் வாழ்கின்ற தமிழ் புத்தி ஜீவகள் மற்றும் யதார்த்தமாகச் சிந்திக்கின்ற அரசியல் தலைமைகளும் கிழக்கை வடக்குடன் இணைத்து மக்கள் அடிமைகளாக்குவதை விரும்பவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்லி வருகின்றனர்.
மேலும் எதிர்காலத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அரசியல் யாப்புச் சிர்திருத்தம்,அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் எங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக முன்மொழிந்துள்ளோம்.எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் வருமாயின் அதை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது என்று சிலர் கேட்கின்றார்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்தன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது நாங்கள் அம்பாறை மாவட்டத்திற்கு வரப்போவதாக அறிவித்தால் எங்களுக்கு முன் அவர்கள் வந்த விடுகின்றார்கள் இதுவே அகில இலங்கை மக்கள் நாங்கள் செய்திருக்கின்ற பெரும் சாதனையாகும்.
யார் என்ன சொன்னாலும் யார் எதைச் செய்தாலும் மக்களுக்காக எங்கள் பணி தொடரும் எனத் தெரிவித்தார்.நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி,உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.