அஸ்லம் எஸ்.மௌலானா
அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என்று அக்கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கல்முனையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
அங்கு கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று அதன் நோக்கங்களில் இருந்து விலகிச் சென்று, தனிப்பட்ட சிலரின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகின்றது.
இன்று கிழக்கின் இருப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. வடக்கு, கிழக்கு இணைப்புக்கு திரைமறைவில் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அதற்கு இணங்கி, ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார் என பேசப்படுகிறது. அதனால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக பேச முடியாமல் அவர் மௌனித்து போயிருக்கிறார். கிழக்கு மக்களை அடிமைப்படுத்துகின்ற அந்த இணைப்புக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒருபோதும் இடமளிக்க மாட்டாது.
இது விடயத்தில் எமது கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் மிகத் தெளிவாக, உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடமும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தவுள்ளார். இது விடயத்தில் நாம் எந்த சக்திக்கும் அஞ்சவும் மாட்டோம் சோரம் போகவும் மாட்டோம்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்று ரிஷாத் பதியுதீனும் அகதியாக வெளியேறி தனிக்கட்சியை ஆரம்பித்து, மிகவும் சாணக்கியத்துடனும் தைரியத்துடனும் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து போராடி வருகின்றார். அத்துடன் எமது அம்பாறை மாவட்ட மக்களுக்காக அவர் நேரடியாக களமிறங்கி, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார். அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் அடிக்கடி இங்கு ஓடி வருகின்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழு நாட்டிலும் எழுச்சி பெற்று வருகின்றது. மர்ஹூம் அஷ்ரப் தனிக் கட்சி தொடங்கியதன் உண்மையான இலக்கை நோக்கி மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த நாட்டு முஸ்லிம்களின் தேசியத் தலைவராக பார்க்கப்படுகின்றார். அவரது தலைமையில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டு முஸ்லிம் காங்கிரஸ் நிலை தடுமாறி நிற்கிறது. அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என்பதில் சந்தேகம் கிடையாது” என்றார்.