இலங்கைக்கு இவ்வருடம் மேலதிக ஹஜ் கோட்டா வழங்கப்படமாட்டாது என சவூதி ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையின் கவுன்ஸிலர் ஜெனரல் மக்காவுக்குச் சென்று ஹஜ் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தபோதே இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா வழங்கப்படமாட்டாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கா, மதீனாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி இம் முறை அநேக நாடுகளுக்கு மேலதிக ஹஜ் கோட்டா வழங்கப்படவில்லை என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
மேலதிக ஹஜ் கோட்டா கிடைக்காமையினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் கடமை வாய்ப்பினை இம்முறை இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் ஹஜ் முகவர்களிடம் கடவுச்சீட்டுகளையும் முற்பணக் கொடுப்பனவுகளையும் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக ஹஜ் கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கு தானும் அமைச்சின் அதிகாரிகளும் அரச ஹஜ் குழுவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் தூதரக அதிகாரிகளும் கடைசி நேரம்வரை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் இது அல்லாஹ்வின் ஏற்பாடென்றும் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
இலங்கைக்கு இவ்வருடம் 2240 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.