கொழும்பு நகரில் காட்டுச் சட்டத்துக்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்பு கொழும்பு நகரில் சட்ட விரோதமாக நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டிருப்போர் அகற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோத அறிவிப்பு பலகைகள் மற்றும் கை தள்ளுவண்டிகள் என்பனவும் கொழும்பு நகரில் தடை செய்யப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிடுகையில் கொழும்பு நகரில் நடைபாதை வியாபாரத்தினால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களுக்குள்ளாகிறார்கள்.
இதற்கான தீர்வாகவே நடைபாதை வியாபாரம் தடைசெய்யப்படுகிறது என்றார்.
கொழும்பு நகரின் முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, ஐந்தாம் குறுக்குத் தெரு, மல்வத்தை வீதி, ஒல்கொட் மாவத்தை, பிரதான வீதி மற்றும் போதிராஜ மாவத்தை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இன்று கொழும்பு நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள். பாதசாரிகள் வீதிகளிலே நடக்கிறார்கள். இந்த நிலைமையை தொடர்ந்தும் கொழும்பு நகரில் அனுமதிக்க முடியாது.
அரசியல்வாதிகளின் கடிதங்களுக்காக நடைபாதை களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது.
கடந்த அரசாங்கம் கொழும்பு நகரை அழகுபடுத்த எடுத்த முயற்சிகள் எமக்கு உதாரணமாக இருக்க வேண்டும். கொழும்பு எமது தலைநகரமாகும்.
கொழும்பு நகரில் 1,158 சட்டவிரோத நடைபாதை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் சூழல்பாதுகாப்பு பிரிவின் புள்ளிவிபரப்படி சட்டவிரோதமாக 720 பேர் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
லொத்தர் விற்பனை கூடங்கள் 221 மற்றும் வாகனங்களில் 120 விற்பனை நிலையங்களும் நடைபாதையில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.
சட்டவிரோதமாக கை தள்ளுவண்டிகள் 52, பத்திரிகை விற்பனை செய்யும் கூடங்கள் 45 அமைந்துள்ளன.
நடைபாதைகளில் வாகனங்களில் விற்பனை கூடங்கள் இயங்கி வருவதால் வர்த்தக நிலையங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூராக அமைந்துள்ளன. இதனால் பாதசாரிகள் விபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கிறார்கள்.
சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு மாநகர சபையால் மாற்றிடம் இனம் காணப்பட்டுள்ளது.
அத்தோடு பத்திரிகை விற்பனை கூடங்கள் ,லொத்தர் விற்பனை கூடங்கள் என்பன மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே இயங்க முடியும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.