சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்

 இலங்கை தமிழர்களின் அரசியல் போராட்டத்தை போன்ற உறுதியான போராட்டங்களை இலங்கையின் வரலாற்றில் யாருமே முன்னெடுக்கவில்லை.மிகவும் சிக்கலான தீர்வுகளை நோக்கிய பாதையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக அழகாக நீந்திச் சென்று கொண்டிருக்கின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போராட்டத்தை சர்வதேசத்தின் அழுத்தத்துடனான தீர்வு,இலங்கை அரசின் தீர்வு என இரண்டாகப் பிரிக்கலாம்.தமிழ் மக்கள் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,பேரின அரசின் அத்துமீறலான செயற்பாடுகள் போன்றவற்றை சர்வதேசத்தின் உதவியுடன் தீர்த்துக்கொள்ளலாம்.இலங்கை அரசு சர்வதேசத்தின் நிபந்தனைகளுக்கு மறுக்கும் பட்சத்தில் இலங்கை அரசின் மீது சர்வதேசம் பல் கோண அழுத்தங்களை வழங்கி நிலை குலையச் செய்ய முடியும்.இதனை தாக்குப் பிடிக்கும் வலிமை இலங்கை அரசிடமில்லை என்பதே உண்மை.கதை இவ்வாறு சென்றாலும் இவ் விடயத்தில் சர்வதேசம் இதய சுத்தியுடன் செயற்படுகிறதா என்பதே இதனைத் தொடர்ந்தெழும் வினாவாகும்.

தமிழ் மக்கள் இலங்கையின் அதிகாரப்பரவலாக்கம் சம்பந்தமான விடயங்களில் சமஷ்டி அதிகாரத்துடனான இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்தை எதிர்பார்க்கின்றனர்.சர்வதேசம் ஒரு நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களில் அந் நாட்டிற்கு ஆலோசனை வழங்கலாமே தவிர அந் நாட்டின் மீது நேரடியாக அழுத்தம் பிரயோகிக்க முடியாது.சர்வதேசத்தின் தலையீடுகள் கூட அந் நாட்டின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டதாகவே அமையும்.அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளரிடம் தமிழ் கைதிகளின் விடுதலை பற்றி முறையிட்ட போது இலங்கையின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட விதத்திலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டமை இவ் விடயத்தை தெளிவாக அறிந்துகொள்ளச் செய்கிறது.

தமிழ் மக்களின் சமஷ்டி அதிகாரத்துடனான இணைந்த வடக்கு,கிழக்கு எனும் கோரிக்கை இலங்கை அரசியலமைப்புடன் தொடர்புற்றிருப்பதால் அத் தீர்வை இலங்கை அரசாலேயே வழங்க முடியும்.இலங்கை அரசு தமிழ் மக்கள் தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கேட்ட மறு கணம் மனமுவர்ந்து அள்ளிக் கொடுக்கப்போவதில்லை.அவ்வாறு அள்ளிக் கொடுத்திருந்தால் இலங்கையில் இனவாதம் இப்படி கோரவடிவம் எடுத்திருக்காது.சில அழுத்தங்களை வழங்குவதன் மூலமே தமிழ் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும்.தமிழ் மக்கள் மாத்திரமல்ல இலங்கையின் சிறு பான்மையினர் அனைவரும் இவ்வாறே தங்களுக்குத் தேவையான தீர்வுகளை சுவைக்க முடியும்.

எப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டார்களோ அதன் பிறகு தமிழ் மக்கள் தங்களது உரிமை கோசங்களை அரசியல் ரீதியாக சாதிக்க புறப்பட்டனர்.யுத்தத்தின் பிற்பாடு இடம்பெறும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் வலிமைக்கு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசம் இலங்கைக்குள் நுழைந்தமை பிரதான காரணமாகும்.இலங்கை அரசு சர்வதேசத்தின் கோரப்பிடிக்குள்ளிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுகளை முன் வைக்க வேண்டும் அல்லது சர்வதேசம் முன் வைக்கும் பரிந்துரைகளை ஏற்க வேண்டும்.சர்வதேசத்தின் பரிந்துரைகள் யுத்தக் குற்றச் சாட்டுக்களை மையப்படுத்தியிருப்பதால் அது இலங்கைக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லது,.இதில் படைத் தளபதிகள்,அரசின் முக்கிய புள்ளிகள்,உயர் அதிகாரிகள்  அகப்பட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது.

இலங்கை அரசு தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுகளை முன் வைத்தால் இலங்கைக்குள் சர்வதேசத்தின் தலையீட்டை  நிறுத்தி விடலாம்.இன்றுள்ள கள நிலைமைகளின் படி முதன் முதலில் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வந்த அமெரிக்க இலங்கைக்கு சார்பு போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.சர்வதேசத்தின் நகர்வுகளனைத்தும் அமெரிக்காவில் தங்கிருக்கும் என்பது வரலாறு.இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு சிறிது ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வுகளை வழங்கினால் கூட இலங்கை அரசின் மீதுள்ள சர்வதேசத்தின் கழுகுப் பார்வையை மாற்றிவிடலாம்.ஜனாதிபதி மைத்திரி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால் தான் சிங்களவர்கள் நிம்மதியாக வாழலாமென கிளிநொச்சியில் இலங்கை-ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரியை திறந்து வைக்கும் போது கூறியிருந்தமை மேலுள்ள எனது வாதங்களை நியாயப்படுத்திச் செல்கிறது.

இவ்வரசு சர்வதேசத்தை தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள தங்களுக்கு இயலுமான வழிகளில் முயற்சித்து வருகிறது.அந்த வரிசையில் இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவி த.தே.கூவிற்கு வழங்கப்பட்டமை,பாராளுமன்ற குழுக்களின் தலைவராக தமிழர் ஒருவர் உள்ளமை,இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசியக் கீதம் தமிழில் ஒலிக்கப்பட்டமை,பிரதம நீதியரசராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை,வட மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை,மத்திய வங்கி ஆளுநராக தமிழர் ஒருவரை நியமித்திருந்தமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.இவைகள் சர்வதேசத்திலும் சிறந்த பெறுமானத்தைப் பெற்றிருந்தது.தற்போது அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவுப் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.அமெரிக்காவின் முக்கிய புள்ளிகள் இலங்கை நோக்கி படை எடுத்த வண்ணமுமுள்ளனர்.இலங்கை சர்வதேசத்தின் பல புகளாரங்களையும் பெற்றுள்ளது.இவைகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை திசை திருப்பி விடுமா என்று சிந்திக்க வைக்கின்றது.இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை யாவரும் அறிவர்.

தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கும் விச ஊசி விவகாரம்,காணாமலாக்கப்பட்டோரை கண்டு பிடிக்கும் அலுவலகம் திறப்பு ஆகியன தமிழர்களின் போராட்டத்தை வேறு திசை நோக்கி திருப்பிக்கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.தமிழர்களின் உள்ளங்களில் இவ்வரசு புனர்வார்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது செய்திருப்பார்களா என்ற அச்சம் காணப்பட்டது.பரஸ்பரம் இரு இனங்களுக்குமிடையில் காணப்படுகின்ற புரிந்துணர்வின்மை இதற்கான காரணமாகவுமிருக்கலாம்.நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் தொடர்ச்சியாக மரணிக்கும் போது இவ்வாறான சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதவொன்று.சந்தேகங்கள் எழுவது ஒரு போதும் தவறல்ல.மிகவும் புண்பட்டுக் கிடக்கும் தமிழர்களுக்கு இதன் பிற்பாடு சிறிதேனும் மனம் புண் படும் வகையான எதுவும் அரங்கேறிவிடக்கூடாது என்பதால் இவ்வாறான சந்தேகங்கள் எழுவது மிகவும் பொருத்தமானதும் கூட.

தமிழ் மக்களால் இவ் விச ஊசி விடயமானது மிகக் கவனமாக கையாளப்பட்டிருக்க வேண்டும்.இதன் போது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலர் மேற்கொண்ட பிரச்சாரங்கள் விச ஊசி விவகாரம் உண்மை என்ற பாணியிலேயே காணப்பட்டது.அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இவ்விடயத்தை சர்வதேசத்திடம் கொண்டு சென்று சாதிக்கவே விரும்பினர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையில் சர்வதேசத்தின் உதவியுடனான விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டு ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டிருந்தது.இவ்விடயத்தை சர்வதேசத்திடம் கொண்டு சென்று பொய்த்துப் போனால் தமிழர்களின் இத்தனை நாள் போராட்டங்களும் பொய்த்துப் போக வாய்ப்புள்ளது.கடலின் பயணிக்கும் கப்பல் நீரில் மூழ்க ஒரு சிறு துவாரம் போதுமாகும்.

மஹிந்த ராஜபக்ஸ மிகவும் திடகாத்திரமாக நின்று யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தார்.அவர் யுத்தத்தின் பிற்பாடான சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது போனாலும் அதன் தாக்கங்களை மிகவும் அதிகமாக உணர்ந்திருந்தார்.யுத்தம் ஓய்ந்து சில நாட்களிலேயே சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கலானார்.இவ்வாறான நிலையில் விச ஊசி போன்ற விடயங்களுக்குள் நிச்சயம் கை வைத்திருக்க மாட்டார்.தமிழர்கள் அனைத்தையும் சர்வதேசம் கொண்டு தீர்க்க முயல்வதை சரியான அனுகுமுறையாகக் கூற முடியாது.இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுக்கள் நடாத்தி விச ஊசி தொடர்பான நம்பகரமான விசாரணை பொறி முறைகளை மேற்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.இவ் விசாரணை பொறிமுறையில் அதிகமான தமிழ் வைத்தியர்களை உள் வாங்குவதன் மூலம் இதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதில் திருப்தியில்லை என்றால் திருப்தியற்றமைக்கான காரணங்களை எடுத்துரைத்து சர்வதேசத்தின் உதவியை நாடியிருக்கலாம்.தமிழர்கள் எடுத்த எடுப்பில் எல்லாவற்றிற்கும் சர்வதேசம் செல்வது இலங்கை நாட்டின் கெளரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.இலங்கை நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் கடமையும் கூட.இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன முதலில் இலங்கையில் விசாரணைகளை முன்னெடுப்போம்.அதற்கு இயலாத போது சர்வதேசம் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னாள் போராளிகளில் பலர் புற்று நோயினாலேயே மரணமடைந்துள்ளனர்.இவ்வாறு மரணமடைந்த போராளிகளில் தமிழினி,சிவரதி ஆகியோரை முக்கியமானவர்களாக கூறலாம்.இவர்கள் இருவருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே புற்று நோய் பீடித்திருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான தமிழ்கவி தெரிவித்திருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிவமோகன் இவ்விடயத்தில் எந்த உண்மையும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் குழு நிலை விவாதமொன்றில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு பலர் இவ்விடயம் உண்மைத் தன்மை குறைவானதென கூறிவருகின்றமையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டியதொரு விடயமாகும்.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் சிலர் உறுதி செய்யப்படாத இவ் விடயத்திற்கு சர்வதேசம் செல்ல முனையும் போக்கானது எதற்கும் இலங்கை அரசிடமிருந்து தீர்வு கிடைக்காது என்ற மனோ நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றது.தமிழர்கள் தங்களது இம் மனோ நிலையை மாற்ற வேண்டிய அதே கனம் இலங்கை அரசு அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.தமிழர்கள் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளமையை இதற்கான காரணமாகக் கூறலாம்.இவ் விடயம் சர்வதேச விசாரணை மூலம் உண்மையென அறியப்பட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் முன் கை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.இதில் மஹிந்த அரசு மாட்டிக் கொண்டாலும் அதன் தலையிடியை எதிர்கொள்ளுமளவு தற்போதைய இலங்கை அரசிடமும் பலம் இருப்பதாகக் கூற முடியாது.இவ் விடயம் உண்மையாகவிருந்து அதனை இலங்கை அரசு சர்வதேச அழுத்தமின்றி விசாரித்து உண்மையை வெளிப்படுத்தினால் இவ்வரசின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கை பிறந்து இதற்கான நீதிப் பொறிமுறைகளையும் இவ்வரசிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.இவ்விடயம் உண்மையாக இருந்தால் அதனை அவ்வளவு இலகுவில் மூடி மறைத்துவிடவும் முடியாது.மேலுள்ளவைகளிலிருந்து தமிழர்கள் இதனை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரும் போது அதனை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நெடுங்காலமாக முரண்பாட்டு அரசியல் கொள்கையை கடைப்பிடித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வரசை பல விடயங்களில் பாராட்டியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராட்டு தமிழர்கள் விடயத்தில் இவ்வரசின் கரிசனையை மட்டிட்டுக் கொள்ளச் செய்கிறது.இப்படி இருக்கையில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரின் இவ்வாறான செயற்பாடுகள் அரசின் தலைவர்களை சலிப்பூட்டச் செய்யலாம்.இவ்விடயம் உண்மை இல்லை என்றால் இலங்கை அரசு ஏன் சர்வதேசம் செல்ல பயப்பட வேண்டுமென்ற வினா உள்ளது.இவ் விடயத்திற்கு மாத்திரம் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டு யுத்தக் குற்றச் சாட்டு உட்பட பல விடயங்களுக்கு சர்வதேச விசாரணையை மறுக்கும் போது இலங்கை மீது ஏதோ ஒரு பிழை இருப்பதாகவு பொருள் கொள்ளச் செய்யும்.

அண்மையில் அமெரிக்க மருத்துவ குழுவொன்று வைத்திய முகாம்களை நடாத்தும் நோக்கில் யாழ்பாணம் சென்றிருந்தது.இவ் விச ஊசிச் சர்ச்சை தோன்றியுள்ள,தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலர் இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டை எதிர்பார்க்கும் சந்தர்ப்பத்தில் இக் குழுவின் விஜயம் சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.அமெரிக்க வைத்தியக் குழுவினர் நடாத்திய வைத்திய முகாமில் முன்னாள் போராளிகள் சிலரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைக்கபெற்றுள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தின் தலைவர் மருத்துவக் காலாநிதி சன்ன ஜெயசூரிய குற்றம் சாட்டியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.வடக்கில் வைத்திய முகாம்களை நடாத்தும் நோக்கில் வந்திருந்ததாக கூறப்பட்ட அமெரிக்க வைத்திய குழுவிடம் சில போராளிகளை சோதனைக்கு உட்படுத்த தயார் என்ற அறிவிப்பை வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் விடுத்திருந்தார்.மத்திய சுகாதார அமைச்சர் சர்வதேச விசாரணையை அனுமதிக்கக் கூடாது எனக் கூறி வரும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் இவாறான கருத்தை கூறியிருப்பது வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனின் விதண்டாவாதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது.இதற்குப் பிறகு மத்திய அரசு இவ்வாறான மருத்துவக் குழுக்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்.பிறகு பேரினவாதம் தடுக்கிறதென கூப்பாடு போடுவார்கள்.தற்போது வடக்கு முதலமைச்சர் இவ்விடயத்தில் சற்று நழுவல் போக்கை கையாளுகிறார்.இவ்விடயம் சர்வதேச மட்டத்திற்கு சென்று விட்டதால் இதற்குப் பிறகு இவ்விடயத்தில் உறுதியாக நில்லாது தமிழ் தலைமைகள் சளைத்துப் போனால் அவர்களாகவே தங்களது போலிப் பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்வதாக பொருள் கொடுக்கும்.இது சர்வதேசத்தில் அவர்களது மதிப்பெண்களை குறைத்துவிடும்.

தற்போது கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகத்திற்கு பாராளுமன்றம் விவாதமின்றி அனுமதியளித்துள்ளது.அத் தீர்மானத்திற்கு சபா நாயகர் தனது அனுமதியையும் வழங்கியுள்ளார்.எந்த விடயத்தையும் விவாதம் நடாத்தி பாராளுமன்ற அனுமதியைக் கோருவது சிறப்பானது.அப்போது தான் சபையில் அமர்ந்துள்ள அனைவருக்கும் அவ் விடயத்தில் தெளிவு பிறக்கும்.சபாநாயகர் அனுமதி வழங்கினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.இதற்கு ஒப்புதலளித்த சபாநாயகர் தான் தனது கடமையை செய்ததாகவும் கூறியிருந்தார்.சபாநாயகர் சட்டத்திற்கு முரணான வகையில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தால் அதனை நீதி மன்றம் செல்வதன் மூலம் தடுக்க முடியும்.வரி அமுலுக்கு வந்த முறைமை பிழை என நீதி மன்றத் தீர்ப்பால் நடை முறைக்கு வராது தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற தீர்மானமொன்றிற்கு சபாநாயகர் கையொப்பமிடாமல் நிராகரிப்பதன் மூலம் அத் தீர்மானம் அமுலுக்கு வராமல் தடுக்க முடியும்.பாராளுமன்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் கையொப்பமிடுவது அவரது கடமை.அதனைக் கொண்டு பாராளுமன்ற எடுத்த தீர்மானமொன்றை தடுக்க விளைவது மிகத் தவறான வழி காட்டலாகும்.மக்கள் விடுதலை முன்னணி தன்னால் இத் தீர்மானத்திற்கு முன் வைக்கப்பட்ட பரிந்துரைகள் மூன்றை உட்புகுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.திருத்தங்களை உட்புகுத்தாத தீர்மானத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்துள்ளமை அவர்களின் நகைச் சுவை அரசியல் போக்கை எடுத்துக் காட்டுகிறது.பாராளுமன்ற தீர்மானத்தை அதனை கொண்டு வருபவர்களால் தான் நினைத்த போது மாற்ற முடியாது.திருத்தச் சட்ட மூலங்களை கொண்டுவருவதன் மூலமே மாற்ற முடியும்.இப் பதில் ஜே.வி.பியினருக்கு  பிரதமரிடமிருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரை  கண்டு பிடிக்கும் அலுவலகத்தின் மூலம்  வெள்ளை வேன் கடத்தல் போன்றவற்றையும் கிளறலாம்.இதன் மூலம் மஹிந்த அணியினரை அடக்கவும் வாய்ப்புள்ளது.இதனால் தான் என்னவோ கூட்டு எதிர்க்கட்சியினர் இதனை எதிர்க்கின்றார்களோ தெரியவில்லைஇலங்கையில் விடுதலைப் புலிகள் மூலமும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலரும் அகப்பட்டுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.இது தமிழ் மக்களை இன்னும் அதிகம் பாதிப்பிற்குட்படுத்தும்.தமிழ் மக்கள் சர்வதேச தலையீட்டையே விரும்பி வருகின்றனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை தனது கோரிக்கைகளில் பிரதானமாகக் கொண்டுள்ளது.இப்படி இருக்கையில் இச் செயற்பாடு சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் செயற்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.இவ்விசாரணை பொறிமுறை நியாயமாக இருந்தால் சர்வதேசத்தின் நம்பிக்கையை இலங்கை அரசு வென்றுவிடும்.பாராளுமன்றத்தின் இத் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன் வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வர வேற்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையில் இருந்து விலகிச் செல்கிறதா என்ற அச்சத்தை தோற்றுவிக்கின்றது.

இவ் அலுவலகத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.இது நீதிக்கான பொறிமுறையல்லவென இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.காணாமல் போனோரிற்கு என்ன நடந்துள்ளது என அறிந்தால் நிச்சயம் அவ்விடத்தில் நீதிக்கான பொறி முறையின் அவசியம் உணரப்படும்.இலங்கை வாழ் மக்கள் பலர் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றி அறியாமலேயே உள்ளனர்.இது சரியோ பிழையோ காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள் உயிரோடு  இருப்பதாக நம்புவோரிற்கு அவர்கள் மீள வருவார்களா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையும்.

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

நன்றி – நவமணி