நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டில் பல தசாப்த காலமாக நீடித்தவரும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் சக வாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான சூழலில் வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலெழுந்துள்ளது. ஏற்கனவே தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட வேண்டும். இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகவே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியாக முன்னெடுத்தவர் தான் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா ஆவார். அந்தப் பின்புலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் வடக்கும் கிழக்கும் தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இரு மாகாணங்களும் தனித்தனி மாகாணங்களாக இயங்கி வருகின்றன.
இவ்வாறான நிலையில் இரு மாகாணங்களும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் சூழலில் தற்போதைய அரசியரல் நிலைமை, கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கையின் பின்னணி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாடன் மேற்கொண்ட நேர்காணலை இங்கே தருகின்றோம்.
கேள்வி -தற்போதைய அரசியல் சூழலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் உங்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக்க் கூறப்படுகின்றதே ?
பதில் – ஆம் நாம் ஜனாதிபதியையும், முன்ன்னியின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். ஐ.ம.சு.முன்ன்ணியின் தலைமைப் பதவியை ஏற்றிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு எமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளோம். அதேநேரம் ஜனாதிபதி ஏற்கனவே ஸ்ரீ.ல.சு. கட்சியினதும், ஐ.ம.சு.முன்னணியினதும் சிரேஷ்ட உறுப்பினராக இருந்தவராவார். அதனால் தேசியக் காங்கிரஸினதும் அதன் தலைமையினதும் நம்பகத்தன்மை, விசுவாசம் ஆக்கபூர்வமான பணிகள் குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். அந்தடிப்படையில் எமது காங்கிரஸை அவர் தலைமையிலான முன்னணியில் இணைத்த கொண்டுள்ளார். முன்னணியில் அஙகம் வகிக்கும் எல்லா கட்சிகளும் அவரது தலைமைத்துவத்தை அங்கீகரித்து விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதனால் நாம் அவர் தலையிலான முன்னணியில் இணைந்து பணியாற்றுவோம்.
தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் காலம் முதல் நாம் ஐ. தே. க. பக்கம் செல்லாது சந்திரிகாவின் அணியில் இணைந்திருந்து தான் முஸ்லிம்களின் அபிவலாஷைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொடுத்து வருகின்றோம். தலைவரின் “ஒசியத்“ போன்ற ஒரு நிலைப்பாட்டின் படியே ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான அணியில் தொடர்ந்தும் அங்கம் வகித்து வருகின்றோம். அதனால் அவர் விட்ட இடத்திலிருந்து இவ்வுறவை நான் தொடருகின்றேன். அந்த அடிப்படையில் தான் நாம் ஐ.ம.சு. முன்னணியோடு இணைந்து பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நாம் முகம் கொடுத்து வெற்றி பெற்றதோடு நாட்டுக்கும் நன்மையான விடயங்களையும் ஆற்றி வருகின்றோம்.
கேள்வி – தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் மீளக்கட்டியெழுப்புவதற்காகப் பரந்தடிப்படையிலான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் வடக்குடன் மீண்டும் கிழக்கு இணைக்கப்பட வேண்டும் கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் ஏற்கனவே கிழக்கைப் பிரப்பதற்கான குரலை பலமாக முன்னெடுத்தவர் என்ற வகையில் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பாக சுருக்கமாக விபரிக்க முடியுமா?
பதில் – இந்நாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியாகவே இயங்கி வந்திருக்கின்றன. அவற்றில் வடக்கு கிழக்கு மாகாணங்களும் அடங்கும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் ஒன்றாக இருந்து இம்மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் பிட்டுக்குள் இருக்கும் தேங்காய்ப்பூ மாவும் போன்று வாழ்ந்து வந்த வரலாறு பசுமையானது.
இம்மாகாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏதாவது கருத்து முரண்பாடுகள், கலவரங்கள் எற்பட்டால் அவை சுமார் ஐந்தாறு நாட்களுக்குள் அல்லது ஒரு வார காலத்தில் இரு சமூகங்களதும் தலைவர்கள் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்ந்த வரலாற்றை இந்நாட்டு தமிழ் முஸ்லிம் தலைமைகள் நன்கறியும்.
குறிப்பாக இம்மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மாணவர்கள் ஒரே பாடசாலையில் கல்விகற்றனர். ஒரே சந்தையிலேயே ஒன்று கூடி பொருட்களை வாங்கினர். ஒரே வாசிகசாலையையே இரு சமூகத்தவர்களும் பயன்படுத்தி உறவாடினர். இரண்டு சமூகங்களது மகிழ்ச்சி தினங்களில் இரு சமூகத்தாரும் கலந்து கொண்டனர். அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்குபற்றினர். இவை வழக்கமாக இருந்த வந்தது. இவை அனைத்துமே மறைக்க முடியாத வரலாறு.
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் பொருளாதாரமும் இரண்டரக் கலந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களின் பொருளாதார நலன்கள் முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பொருளாதார நலன்கள் தமிழ் பிரதேசங்களிலும் காணப்படகின்றது.
இவ்வாறான நெருக்கத்திற்கும் ஐக்கியத்திற்கும் கிழக்கு என்பது தான் காரணம் என்று சொல்ல வேண்டும். குறிப்பாகப் பொத்துவிலிருந்து மூதூர் குச்சவெளி வரையும் உள்ள பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் பேசும் மொழிப் பாணியும் ஒன்றாகவே உள்ளமை விஷேடமானது. இந்த தமிழ்மொழி இந்தியாவில் ஒரு விதமாகவும், கொழும்பில் மற்றொரு விதமாகவும் காலியில் இன்னொரு விதமாகவும் பேசுகின்ற வழக்கு காணப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தில் எங்கு சென்றாலும் தமிழ் மொழி பேச்சு வழக்கு ஒரே விதமாக இருந்து வருகின்றது. இது இவர்கள் ஒரு மண்ணில் வசிக்கின்றார்கள் என்பதற்கு நல்ல சான்று. அதனால் இஙகு வாழும் தமிழ் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்வதற்கு கிழக்கு பிரிந்திருப்பதே சாலச் சிறந்தது
கேள்வி – கிழக்கை வடக்குடன் இணைக்கக் கோருவதற்கானக் பின்னணி எதுவாக இருக்குமென கருதுகின்றீர்கள்?
பதில்- கிழக்கு அதிகளவிலான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. பசுமையான வயல் நிலங்கள், இயற்கை எழில்மிகு கடற்கரைகள், உல்லாசப் பயணிக்ளைக் கவர்ந்திழுக்கும் பகுதிகள். இயற்கைத் துறைமுகம், வரலாற்று முக்கியத்தவம் மிக்க தமிழ். முஸ்லிம் வழிபாட்டுதலங்கள், குளங்கள் மாத்திரமல்லாமல் மீன்பிடித் துறைமுகங்கள் அடங்கலாக நிறைய வளங்கள் இங்குள்ளன. இவ்வளங்களை அடைந்து கொள்வதற்காக உள்நாட்டிலுள்ள சில தமிழ் பேரினவாதிகளுக்கும் வெளிநாடுகளிலுள்ள சில தமிழருக்கும் சில நாடுகளுக்கும் இம்மாகாணம் தேவைப்படுவதை வரலாற்றை அடிப்படையாக வைத்து இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்தக் கோரிக்கைக்குள் வடக்கின் மேலாதிக்க சிந்தனை இருப்பதையும் மறந்து விட முடியாது.
ஒரு காலத்தில் கிழக்கில் வட மாகாணத்தின் மேலாதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வியிலும், நிர்வாக விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இம்மேலாதிக்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு உள்ளானது. அதனால் வட மாகாணத் தமிழர்களின் மேலாதிக்கத்தை அடக்குவதற்காக மட்டக்களப்பில் யாழோட்டி கழகம் என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை இன்றும் எழுத்து வடிவில் இருப்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இவ்வாறான கழகம் அமைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனும் மறந்திருக்க மாட்டார்.
கேள்வி- முஸ்லிம்கள் தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களில் மாத்திரமல்லாமல் ஆயுதப் போராட்டங்களிலும் இணைந்து செயற்பட்டனரே?
பதில்- நிச்சயமாக. அது தான் உண்மை. சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்த உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு போன்ற அரசியல் பொராட்டங்களில் தந்தை செல்வாவுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட்டனர். அவர்களில் மர்ஹும் மசூர் மௌலானா. உதுமா லெப்பை உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் அதனைத் தொடர்ந்து ஆரம்பமான ஆயுத போராட்டத்திலும் முஸ்லிம் இளைஞர்கள் பங்கெற்றனர். குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட், ஈரோஸ், எல்.ரி. ரி. ஈ போன்ற இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு உண்மைக்கு உண்மையாக செயற்பட்டனர். இது மறைக்க முடியாத வரலாறு.
ஆனால் அக்கால கட்டத்தில் ஆயுதக் குழுக்களிலிருந்த முஸ்லிம் இளைஞர்களை இலக்கு வைத்து அழிப்பதற்கென்றும் அவர்களை வளர விடக் கூடாது என்றும் சில ஆயுதக் குழுக்கள் இரகசியமாக செயற்பட்டு வந்த்தையும் இங்கு சுட்டிக்காட்ட வெண்டியுள்ளது. ஆயினும் தமிழ் ஆயுதக் குழுக்களை இலங்கைப் படையினரிடமோ, இந்தியப் படையினரிடமோ முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாகத் தம் சொந்த உறவுகளைப் பாதுகாப்பது போன்று தம் வீடுகளுக்கள் வைத்து முஸ்லிம் தாய்மார் பாதுகாத்தனர்.
இவ்வாறான சூழலில் தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் வட மாகாணத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை இரவோடிரவாக உடுத்த உடையோடு வெளியெற்றினர். கிழக்கு மாகாணத்திலும் ஆங்காங்கே பள்ளிவாசல்களில் படுகொலைகளை மேற்கொண்டதோடு முஸ்லிம்களிடம் கப்பமும் பெற்றனர். அத்தோடு முஸ்லிம் விவசாயிகளின் நெல் உள்ளிட்டவற்றையும், வர்த்தகர்களின் பொருட்களையும் கொள்ளையிடத் தொடங்கினர்.
கேள்வி- வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி குறிப்பிடுவதாயின்? பதில் இந்த ஒப்பந்தம் 1987 இல் கைச்சார்த்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் ஊடாக கிழக்கு வடக்கோடு இணைக்கப்பட்டது. இதன் நிமித்தம் கிழக்கில் வாழும் தமிழ் மக்களதோ, முஸ்லிம் மக்களதோ கருத்துக்கள் அறியப்படாது இரவோடிரவாக தற்காலிகமாக இணைக்கப்பட்டது. இதனூடாக முஸ்லிம்களின் விகிதம் 17 வீதமாகக் குறைக்கப்பட்டதோடு முஸ்லிம்கள் அரசியலதிகாரமற்ற ஒரு குழுவாகவே மாற்றப்பட்டனர். கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகளும் ஆயுதக்குழுக்களும் இணைந்து பின்னிய முதலாவது அரசியல் சதி வலை தான் இது. இது தவறு என்பதை விடவும் மாபெரும் துரோகம் என்றே கருதுகின்றோம்.
கேள்வி- அப்படியென்றால் இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் நீங்களும் அங்கம் வகித்தீர்களே?
பதில்- வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போதும் வடகிழக்கு மாகாண சபைக்கு தேர்தலை நடாத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டப்படவில்லை. என்றாலும் அம்மாகாணத்திற்காக நடத்தப்பட்ட தேர்தலில் எமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிட்டு வெற்றி பெற்று அங்கம் வகித்தோம். எமது சமூகத்தின் மொத்தப் பிரதிநிதித்துவம் இன்றியே அச்சபை அமைக்கப்பட்டது. அதனால் முஸ்லிம் பெயரில் வடகிழக்கு மாகாண சபைக்கு வடக்கு கிழக்கைச் சாராத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன் ஊடாக முஸ்லிம்கள் எதுவுமே இல்லாத சமூகமாக மாற்றப்பட்டனர். அம்மாகாண சபையில் அங்கம் வகித்த்தன் மூலம் நானும் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.
கேள்வி – வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக மர்ஹும் அஷ்ரஃப் தலைமையில் தமிழ் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள்
பதில்- வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட காலம் முதல் அந்த அடிமைச் சாசனத்திலிருந்து விடுதலை பெற வெண்டும் என்ற நோக்கில் கிழக்கின் முஸ்லிம் சமூகம் மர்ஹும் அஷ்ரஃப்பின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இந்தடிப்படையில் பல பேச்சுவார்த்தைகள் தமிழ் தரப்புக்களுடன் தலைவர் அஷ்ரஃப் தலைமையில் இடம்பெற்றது. அவற்றில் நானும் பங்குபற்றியுள்ளேன். அதாவது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது தான் தமிழ் பேசும் மக்களுக்கு சிறப்பானது என்றொரு விடயம் இருந்தால் அங்கு முஸ்லிம்களைப் புறந்தள்ளாத அரசியல் அதிகாரத்தின் அவசியம் குறித்து பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டினோம். ஆனால் அப்பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களினதும், முஸ்லிம் காங்கிரஸினதும் கோரிக்கை குறித்து எந்தவித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. அன்று தமிழ் அரசியல் தலைமைகளின் கரங்களில் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களின் பேச்சாளர்களாகவே செயற்பட்டனர். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக மர்‘ஹும் அஷ்ரஃப் நிறைய முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால் அம்முயற்சிகளைத் தமிழ் தரப்புக்கள் நிறையவே தட்டிக்கழித்தன..
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு நாள் தலைவர் அஷ்ரஃப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது நிபந்தனையோடு வடக்கு கிழக்கு இணைவதற்கு குரல் கொடுக்கும் கடைசி முஸ்லிம் தலைமை நானாகத் தான் இருக்கும். இதன் பின்னர் எனது சமூகம் வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிக்கக் கோரும் என சுட்டிக்காட்டி ஆற்றிய உரை இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது.
இவ்வாறான சூழலில் தான் அஷ்ரஃப் மரணமடைந்தார். அவரது மறைவு முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல தமிழர்களுக்கும் ஒரு இழப்பாகவே நான் கருதுகின்றேன். அதேநேரம் தமிழ் ஆயுதக் குழுக்களால் விரட்டியடிக்கட்ட முதலாவது நபராகவே அவர் விளங்குகின்றார். அவரது கல்முனை வீட்டை உடைத்து சேதப்படுத்தியே அவரை விரட்டியடித்தனர். அவர் தான் கொழும்புக்கு வந்த முதலாவது அகதியாவார். இருந்தும் அவர் தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்கள், அவரது பாடசாலை, ஆசிரியர்கள். நண்பர்கள் மாத்திரல்லாமல் பல மாணாக்கர்களின் அசிரியர்கள் தமிழர்களாக இருந்த போதிலும் அவர் ஒரு யதார்த்த முடிவுக்காக தன்னை அர்ப்பணித்து இருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கேள்வி- இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக 2002 – 2004 காலப்பகுதியில் இடமபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து குறிப்பிடுவதாயின்?
பதில்- தலைவர் அஷ்ரஃப் மரணமடைந்த பின்னர் சகோதரர் ரவூப் ஹக்கீம் கட்சித் தலைமையை எற்றிருந்த சந்தர்ப்பத்தில் அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 2002 இல் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. நோர்வே ஊடான பேச்சுவார்தை அல்லது தீர்வு என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழல் உருவாகும் போது முஸ்லிம்களுக்கென பேசக் கூடிய அரசியல் கட்சியும் சுதந்திர மேடையும் இருக வேண்டும் என்பதற்காகத் தான் அஷ்ரஃப் மு.காவை அன்று தோற்றுவித்தார். அதற்கு மக்களும் வாக்களித்து ஆணை வழங்கினர்.
மர்ஹும் அஷ்ரப் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஹக்கீம் தலைவராக இருந்த அன்றைய சூழலில் வந்தபோது அவ்வொப்பந்தத்தில் முஸ்லிம்களை மிக மோசமாகப் பாதிக்கின்ற விடயங்கள் அதன் உள்ளடக்கங்களில் உள்ளடக்கப்பட்டு இருந்ததை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இவ்வொப்பந்தத்தின் போது ஏற்படாதிருக்க உண்மையான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தமிழ் தரப்புக்கள் வழி செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அது நீண்ட உறவுக்கான அடித்தளமாகவும் இருந்திருக்கும்.
அவ்வொப்பந்தத்தில் முஸ்லிம்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படாது அவர்கள் வடக்கு கிழக்கில் வாழும் சிறு குழுக்கள் என்று உள்ளடக்கப்பட்டனர். அவ்வொப்பந்தத்தின் ஊடாகப் புலிகளுக்கு வடக்கு கிழக்கு முழுவதும் ஏகபோக உரிமை வழங்ப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக இருந்து பேச வேண்டுமென்ற கோரிக்கை தமிழ் தரப்பக்களாலும் ஆயுதக்குழுக்களாலும் நிராகரிக்கப்பட்டன. அத்தோடு அன்றைய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் அதனை நிராகரித்தார். இச்சமயம் ரவூப் ஹக்கீம் தான் பேச்சுவார்த்தையில் தனித்தரப்பாகக் கலந்து கொள்வதாக ஊடகங்களுக்கு அறிக்கை விட பிரதமர் ரணில் அவர் அரச தரப்பு பிரதிநிதியாகவே கலந்து கொள்கிறார் என உடனடியாக மறுப்பு தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றிருந்தது.
கேள்வி – வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறான சூழலில் உருவானது?
பதில்- வடக்கு கிழக்கு இணைப்பைத் தொடந்து முஸ்லிம்கள் எதிர்கொண்ட நிலைமைகள் ஆரோக்கியமாக அமையவில்லை அதனால் இந்நிலைமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணமும் உந்துதலும் முஸலிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. அதனால் நானும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் மு. கா.விலிருந்து விலகி கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காகவும் வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிப்பதற்கவும் தனியொரு கட்சி அமைத்து குரல் கொடுக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. அதற்கான முக்கிய காரணம் வடகிழக்கு இணைப்பின் ஊடாக முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக மாற்றப்பட்டனர். அத்தோடு முஸ்லிம்கள் நிம்மதியையும் இழந்தனர். இதனால் தமிழ்களுக்கும் முஸலிம்களுக்கும் இடையில் ஒரு பிரிவினை வாதமும் கலவரங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. .
இன்று சிங்களப் பேரினவாதத்தின் கீழ் வாழ முடியாது என்று தமிழர்கள் எவ்வாறு சொல்லுகின்றார்களோ அதேபோன்று இணைந்த வடக்கு கிழக்குக்குள் தமிழ் பெரும்பான்மையினுடைய ஏகாதிபத்திய செயற்பாடுகளின் கீழ் வாழ முடியாது என்று குறிப்பிட்டு அதற்கு எதிராக முஸ்லிம் சிறுபான்மை கிளர்ந்தெழவும் தேவை ஏற்படின் ஆயுதம் தூக்குவதற்குமான நிலைப்பாடுகளும் கூட எதிர்காலத்தில் எற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலைமை எற்படுமாயின் அது கிழக்கில் சகோதர சமூகங்களாக வாழும் தமிழ் முஸ்லிம்களுக்கு இடையில் உலகம் முடியும் வரையும் நீண்டு செல்லும். அதனால் இரண்டு சமூகங்களும் நிம்மதியாக வாழ முடியாது இந்தக் காரணங்களை மையமாகக் கொண்டு தான் கிழக்கு பிரிக்கப்பட வெண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தோம். அதேநேரம் கிழக்கு வடக்கோடு இணைவதென்றால் கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் உள்வாங்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு அதனூடாக இணையலாம் என்ற கருத்தும் எம்முள் இருந்து வந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
இவ்வாறான பின்பலத்தில் தான் நாம் கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தோம். அப்போது கிழக்கில் வாழும் சில தமிழ் சகோதரர்கள் எம்மை இனவாதிகளாகப் பார்க்கும் அளவுக்கு தமிழ் அரசியல் தலைமைகள் எமக்கு எதிராக வசைபாடினர். கிழக்கு வடக்கிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற குரல் வெளிப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில் இப்பிரிப்பு இடம்பெற்றது.
கேள்வி- வடக்கு கிழக்கிலிருந்து பிரிக்கப்பட்டதால் கிடைக்கப் பெற்றுள்ள நன்மைகள் என்ன?
பதில் – கிழக்கில் வாழும் தமிழ் முஸலிம்கள் மிகுந்த சந்தோஷங்களுடன் எதுவிதப் பிரச்சினைகளும் இன்றி வாழுகின்றனர். மாகாண சபையிலும் கூட தமிழர் ஒரு தரமும். மறுதரம் முஸ்லிமும் முதலமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது கிழக்கு மாகாணத்திற்கேயுரிய சிறப்பான அம்சம் என்று குறிப்பிடலாம். கிழக்கில் வாழும் தமிழரோ அல்லது முஸ்லிமோ கிழக்கு முதலமைச்சராகவும், வடக்கில் வாழும் தமிழர் வடக்கில் முதலமைச்சராகவும் வரலாம். இருவரும் தமிழ் பேசும் முதலமைச்சர்களாக இருப்பர். ஒன்பது மாகாண சபைகளில் இருவர் தமிழ் பேசும் முதலமைச்சர்களாக இருப்பது எமக்கு பெரும் பலமாகவே அமையும்.
அதேதேரம் அபிவிருத்தி என்று வரும் போது இரண்டு மாகாண சபைகளுக்குமே மத்திய அரசாங்கம் வளங்களை ஒதுக்கும். இப்படியான வசதி வாய்ப்புக்கள் இணைந்து ஒரு மாகாணமாக இருக்கும் போது கிடைக்காது. எல்லா மாகாணங்களுக்கும் ஒரே விதமாக வளங்கங்கள் ஒதுக்கப்படும். அதனால் ஒன்றாக இருப்பதை விடவும் தனித்தனி மாகாணங்களாக இருக்கும் போது தான் அதிக நன்மைகள் கிடைக்கப் பெறும்.
இதேவேளை கிழக்கை தமிழர்கள் இன்றி முஸ்லிம்கள் ஆட்சி செய்வதோ, முஸ்லிம்கள் இன்றி தமிழர்கள் ஆட்சி செய்வதோ தமிழர்கள் முஸ்லிம்கள் இன்றி சிங்களவர் ஆட்சி செய்வதோ இம்மாகாணத்தில் தனித்து நின்று தீர்மானங்களை எடுப்பதை சாத்தியமற்றதாக்கி உள்ளது. எல்லாத் தீர்மானங்களையும் மூன்று இனத்தினரும் ஒன்றுபட்டு எடுக்க வேண்டிய நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. இது நல்ல ஆரோக்கியமான நிலைமையாகும்.
தமிழ் மக்களின் பேச்சு வழக்கு. உணவு, உடை உட்பட சமய விழுமியங்களைத் தவிர அனைத்தும் முஸ்லிம்களுடன் ஒன்றாக இருக்கும் இச்சூழலில் அரசியலும் ஒன்றாக இருப்பது தான் அவர்களுக்கு நிம்மதியை வழங்கும் என்ற நிலைப்பாடு எம்மத்தியில் உள்ளது.
வடக்குடன் கிழக்கு இணைக்கப்படிருந்த போது எற்பட்ட வடுக்கள் கிழக்கில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெவ்வேறு சதிகளைக் கொண்டு மூட்டி விட்டு கலவரங்களை ஏற்படுத்தி தோற்றுவிக்கப்பட்ட வடுக்கள் வரலாற்றில் பதிவாக உள்ளன. பள்ளிவாசலகள், கோவில்கள் விகாரைகள் என்பன திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்ட நிகழ்வுகளை மன்னித்தாலும் அவை எக்காலத்திலும் மறக்கப்படாத வடுக்களாகவே உள்ளன. ஏற்கனவே வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீளக் குடியேறவோ, வீடுகளையும், உடைந்த பள்ளிவாசல்களையும் இன்றுவரையும் கட்டிக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். இது தொடர்பாக கிழக்கு மாகாணத்திலும் அதிக பிரச்சினைகள் உள்ளன. இதைவிடவும் அதிக பிரச்சினைக்கு வடக்கு முஸலிம்கள் முகம் கொடுத்துள்ளனர்.
கேள்வி- இவ்வாறான சூழலில் வடக்கும் கிழக்கும் மீண்டும் சேர்ந்திருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகின்றதே……
பதில் – இவ்வாறான சூழலில் வடக்கும் கிழக்கும் சேர்ந்திருக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பும் இதே அரசியல் தலைமைகளும் ஆயுத்தாரிகளும் கிழக்கில் ஒற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே தமிழர்களுக்கென்று சிறு சிறு பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளையும் ஏற்கனவே பிரித்தெடுத்தது மாத்திரமல்லாமல் இன்னும் சிலவற்றைப் பிரிக்கும் படி கோரிய வண்ணமுள்ளனர். உதாரணமாக கல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழுகின்ற போதிலும் தங்களுக்கென்று தனியாகப் பிரித்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றனர். ஆனால் அங்குள்ள நிலத்தொடர்போடு எல்லைகளை குறித்துக் கொள்ள முடியாதளவுக்கு யதார்த்தம் உள்ளது. அதேதேரம் ஆலையடிவேம்பு என்பது அக்கரைப்பற்றிலிருந்து தலைவேறு உடல் வேறாக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரைதீவு உருவாக்கப்பட்டு நிந்தவூரிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறையிலிருந்து நாவிதன்வெளி பிரிக்கப்பட்டள்ளது. இவ்வாறு அம்பாறை மாட்டத்தில் மாத்திரமல்லாமல் கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது. ஒரு சிறிய நிலப்பரப்பாயினும் அது தங்களுக்குரியது என அடையாளப்படுத்தி தமிழர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள். என்னுடைய பார்வையில் இவை கிழக்கில் உண்மையாக வாழும் தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கும் என நான் நம்பவில்லை. மாறாக அரசியல் தலைமைகள் தான் தமிழர்களையும் முஸ்லிம்களையும் தம் வாக்கு வங்கிக்காக இவ்வாறு கூறு போட்டு வைத்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் மீண்டும் வடக்கு கிழக்கை இணைக்கக் கோருவதை வேடிக்கையான ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து விவசாயம் மற்றும் பண்ணைகளை மேற்கொண்ட எத்தனையோ காணிகளையும் பண்ணைகளையும் வேறாகவும் விவசாயிகளை வேறாகவும் முஸ்லிம்களை வேறாகவும் தமிழர்களை வேறாகவும் பிரிக்கும் நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைமைகள் கிழக்கில் இன்னும் கைவிட்டபாடில்லை.
இப்படி இருந்தும் வடக்குடன் கிழக்கை இணைக்குமாறு வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவரான இரா சம்பந்தன் அடங்கலான தமிழ் அரசியல் தலைமைகள் தொடராகக் கோரி வருகின்றன. அவர்கள் உட்பட சகருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் இதய சுத்தியோடு தானா இக்கோரிக்கையை விடுகின்றனர் என்பதை ஒரு தரம் சிந்தித்து பார்க்க வேண்டும். உதாரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கையும் கிழக்கையும் இணைப்போம். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகத் தருகின்றோம் என்று சொல்வது கூட முஸ்லிம்களைப் பச்சை முட்டாள்கள் என்று சொல்வதாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதனைக் கூட முஸ்லிம்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று அவர் நினைத்துள்ளார் போலும். ஏதாவது பதவி என்றால் முஸ்லிம்கள் அதற்கு உடனடியாக வாக்களித்து விடுவார்கள் என்று ஒரு பச்சோந்தித்தனமாக அவர் முஸ்லிம்களை நோக்குவது வெளிப்பட்டுள்ளது. இது வேடிக்கையானதும். அவரது கோரிக்கையில் உண்மைத்தன்மை இல்லாமையும் மிகத் தெளிவாக நிரூபணமாகின்றது. தமிழ்ப் பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டு வந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் நானும் உறுப்பினராக இருந்துள்ளேன். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முதலமைச்சரைத் தெரிவு செய்யும் போது ஒரு போதும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாது. அதேநேரம் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை உறுதிப்படுத்த சம்பந்தன் ஐயா எவ்வளவு காலம் தான் உயிர் வாழ்வார் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
கேள்வி- நீங்கள் தமிழ் தலைவர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?
பதில்- இந்த குறிப்பிட்ட வரலாற்று காலத்தில் நாம் வாழ்ந்தும் அரசியலில் ஈடுபட்டும், மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்தும் பெற்றுள்ள அனுபவிங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்ந்தனிடமும், வட மாகாண முதலமைச்சர் விக்னெஷ்வரனிடமும் ஒரு அன்பான வேண்டுகோளைப் பகிரங்கமாக விடுக்க விரும்புகின்ளேன். கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை உலகம் முடியும் வரையும் நிம்மதியாக வாழ வைக்க நீங்கள் எமக்கு ஒத்துழைப்பு நல்குங்கள். வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டுமென தமிழ் மக்களையோ, முஸ்லிம்களையோ சூடாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இதேவேளை இன்றுள்ள இளைஞர்களுக்கோ வளர்ந்தவர்களுக்கோ கிழக்கு மாகாணம் எவ்வாறு தனியாக இருந்தது? அது எவ்வாறு இணைக்கப்பட்டது? அதன் மூலம் கிழக்கு அனுபவித்த துன்ப துயரங்கள் யாவை என்பன குறித்து அறியாதிருக்கலாம். அதனால் அவை குறித்து கிழக்கு மாகாண மக்களையும் இளைஞர்களையும் விழிப்பூட்டுவதற்காக சில வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
மேலும் வடக்கு கிழக்கை இணைக்கவென பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்த அனைத்துக் காரணங்களுமே நிராகரிக்கப்பட வேண்டியவை.
கிழக்கு வடக்கோடு இணைவதன் மூலம் தென் கிழக்கு அலகு கிடைக்கும் என சில அரசியல் தலைமைகள் கூறி மக்கள் மத்தியில் கோமாளியாக்கப்பட்டுள்ளார்கள். தென் கிழக்கு அலகைப் பெற்றுக் கொண்டு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் முஸலிம்களை நட்டாற்றில் விடுகின்ற அரசியல் சதி முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் துணை போக மாட்டார்கள்.
ஆனால் இணைப்புக்காக முன்வைக்கப்படும் ஒரு காரணத்தில் மாத்திரம் அவர்களுடன் உடன்படலாம். அதாவது இணைந்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட அடிப்படையில் பேரினவாதச் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கலாம் என்கின்றனர். ஆனால் சேர்ந்திருந்தாலும், பிரிந்திருந்தாலும் இது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு அச்சுறுத்தல் தான். இது தொடர்பாக பேசுகின்ற நிலை வரும் போது முஸ்லிம்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியவாறு நாம் சில ஏற்பாடுகளைச் செய்யலாம்.
அதேதேரம் கிழக்கில் சில தமிழ் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தாம் இணைந்த வடகிழக்குக்குள் தான் செல்லப் போகின்றோம் என்று எண்ணுபவர்களும் இருக்க முடியும். அதனை நாம் நிராகரிக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் தமிழ்த் தலைமைகள் உண்மையான இதய சுத்தியோடு கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல் தலைமைகளுடனும் புத்திஜீவிகளுடனும் பேசுவதற்கு முன் வர வேண்டும். இங்கு கிழக்கு அரசியல் தலைமை என்பது நாம் கிழக்கு வெளியே உள்ள அரசியல் தலைமைகளால் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அதனால் நாம் அத்தலைமைகள் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். இணைக்க வேணடும் என்ற விடயம் குறித்து கிழக்கு மாகாண அரசியல் தலைமைகளுடனும் புத்திஜீவிகளோடும் மனம் விட்டுப் பேசத் தயார் என்றால் அதற்கான அடிப்படகள் சிலவற்றை எம்மால் இங்கு முன்வைக்கலாம்.
அதாவது கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை வடக்கோடும், கிழக்கிலுள்ள சிங்களப் பிரதேசங்களை அருகிருள்ள ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களோடும் இணைத்து பெரும்பான்மை முஸ்லிம் மாகாண சபையைக் கிழக்கிலும், பெரும்பான்மை தமிழ் மாகாண சபையை வடக்கிலும் அமைப்பதன் மூலம் இரண்டு தமிழ் பேசும் மாகாண சபைகளை மீண்டும் உறுதி செய்து கொள்ளலாம். அப்போது வட மாகாணத்தில் முஸ்லிம்களும், கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக வாழும் நிலை உருவாகும். அவை ஐக்கியத்தைப் பேணவும் இரு மாகாண சபைகளும் சமநிலையில் பயணிக்கவும் வழி செய்யும்.
இந்த விடயங்களை நாம் ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு வர முடியுமென்றால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும். இப்போது முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் எவரும் முடியாது என்று கூற முடியாது. இவ்வாறான அழுத்தத்தின் ஊடாக தமிழ் பேசுகின்ற இரு மாகாண சபைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். அவற்றில் ஒன்றில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் மற்றொன்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் இருப்பவர். இப்பேரவையின் மூலம் மாகாணங்களினதும் மாவட்டங்களினதும் எல்லைகளை மாற்றியமைக்கவும் முடியும். இது மிக ஆரோக்கியமானது.
ஆகவே தமிழ் அரசியல் தலைமைகள் இதய சுத்தியோடு பேச முன்வருவார்கள் என்றால் இவை தொடர்பாகப் பேசலாம். இல்லாவிட்டால் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதுவிதப் பிரச்சினையுமே கிடையாது. அவர்கள் அன்று போல் இன்றும் என்றும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழவென கிழக்கு பிரிந்தே இருக்கட்டும்.
நான் மர்ஹூம் அஷ்ரபின் ஆலோசகராக கடமை புரிந்த காலத்தில் அதாவுள்ளவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியவன். இந்த பேட்டியில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் உண்மாயானவை முஸ்லிம்களின் மொத்த வியாபாரிகள் போல வேடமிட்டு கிழக்குமாகனத்தையும் முஸ்லிம் களையும் விற்று பிழைக்கவும் அஷ்ரபை சந்தை படுத்தி தமது பைகளை நிரப்ப , துணை போகும் சகலரும் சமூக துரோகிகள் என்ற வரலாறு தோன்றும் என்ற பக்கவிளைவு நிச்சயமாக உருவாகும்.