எஸ்.எம்.அறூஸ்
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வீரா் ஏ.எம்.எம்.றிஸ்வான் 1.75 மீற்றர் பாய்ந்து மூன்றாமிடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினைப்பெற்றுள்ளார்.
அம்பாரை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட ஏ.எம்.எம்.றிஸ்வான் அண்மைக்காலமாக உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் பல வெற்றிகளைப் பெற்று தனது லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளதாக கழகத் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.எம்.எம்.றிஸ்வான் அம்பாரை மாவட்ட விளையாட்டு விழாவில் உயரதம்பாய்தலில் 1.74 மீற்றர் பாய்ந்து மூன்றாமிடத்தைப் பெற்றதுடன் அண்மையில் அம்பாரை நகரில் இடம்பெற்ற மாவட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியிலும் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதேபோன்று அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியிலும் மிகச்சிறந்த 1.78 மீற்றர் பெறுதியை ஏ.எம்.எம்.றிஸ்வான் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் இவர் பெற்றிருந்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த போட்டியில் மூன்றாமிடம் பெற்றதன் மூலம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவிலும் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
போட்டிக்கு முதல் நாள் தனது காலீல் காயம் ஏற்பட்ட போதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் போட்டியில் பங்குபற்றிய றிஸ்வான் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல கிழக்கு மாகாணப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏ.எம்.எம்.றிஸ்வானுக்கு பாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தபோதிலும் லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக கடைசி நேரத்தில் றிஸ்வானுக்கு போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
அதேவேளை, உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் முதலாமிடத்தை அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த குறுகே 2.00 மீற்றர் பாய்ந்து புதிய கிழக்கு மாகாண சாதனையுடன் தங்கப்பதக்கத்தையும், இரண்டாமிடத்தை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.பி.எம்.நஹ்தீர் 1.83 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுன் கொண்டனர்.
உயரம்பாய்தல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் ஜே.எம்.உபசேன கலந்து கொண்டு வீரா்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். இதில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் உடன் பங்கேற்றிருந்தார்.