கிழக்கில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ்விடம் கட்சித் தலைவர், செயலாளர் ஆலோசனை!

 
hisbullah
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான விசேட பொறுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம்கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கையளித்துள்ளனர். 
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்து வரப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் சுமார் 300 பேர் வீதம் ஆயிரக்கணக்கானவர்கள் அதில் கலந்து கொள்ளவுளளனர். 
கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை பலப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலமான சக்தியாக மாற்றி எதிர்காலத்தில் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்சியாக மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசேடமாக, கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட பல்வேறுபட்ட அசௌகரியங்கள் – சந்தேகங்கள் காரணமாக முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஒதுங்கவேண்டியயொரு நிலை ஏற்பட்டது. எனினும், தற்போது கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த சந்தேகங்களை நீக்கி அனைத்தின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக இதனை முன்னோக்கி கொண்டு செல்கின்றார். 
65 ஆவது மாநாட்டைத் தொடர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்கு தேவையான அதிரடி நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார். அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. 
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை இலக்காக வைத்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விசேட பணிகளை எனது தலைமையில் மேற்கொள்ளவுள்ளோம். இதற்குத் தேவையான ஆலோசனைகளை கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எனக்கு வழங்கியுள்ளனர்.  
கிழக்கு மாகாணத்திலுள்ள சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதேவேளை, குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு கிழக்கு மாகாண மக்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் – என அவர் மேலும் தெரிவித்தார்.