சர்ச்சைக்குரிய மும்மன்ன பிரதேச பாடசாலை மைதானத்தை மீட்டெடுக்க அமைச்சர் ரிஷாட் ஊர்மக்களிடம் உறுதி !

 

சுஐப் எம் காசிம்

மும்மன்ன பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்தும் சிங்கள -முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் தொடர்பிலும் உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார்.

IMG_0355_Fotor

மும்மன்ன ஜும்மா பள்ளிவாசலில் ஊர்பபொதுமக்களை சந்தித்து அவர்களின் மனக்குறைகளை அவர் அறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், பாடசாலை அதிபர், சமூக நல இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் மைதான பிரச்சினையின் பின்னர் இந்த ஊரில் ஏற்பட்டுள்ள மாற்றமான சூழ்நிலை குறித்து விளக்கினர்.

இனவாதிகளின் நச்சரிப்புகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலே தாங்கள் பீதியுடன் வாழ்ந்து வருவதாகவும் இரவு நேரங்களில் நிம்மதியின்றியே தூங்குவதாகவும் தெரிவித்தனர். 

IMG_0362_Fotor

’எங்களது பாடசாலைக்குச் சொந்தமான இந்த மைதானத்தை எமது மாணவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்ற போதும், திடீரென இந்தக் மைதானத்திற்கு மாற்றினச் சகோதரர்கள் உரிமை கோருகின்றனர். இனவாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் இந்தக் காணியை அபகரிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். எங்களது கடைகளிலே பொருட்களை வாங்கவேண்டாம் என இனவாத சக்திகள் வற்புறுத்தி வருவதுடன் தெருவோரங்களில் திடீரென அமைக்கப்பட்ட கடைகளில் சிங்களச் சகோதரர்கள் தமது பொருட்களை வாங்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் எமது வியாபார நடவடிக்கை மிகவும் மந்தநிலையில் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். 

பொது பலசேனா செயலாளர் ஞானசார தேரர் மும்மன்னைக்கு விஜயம் செய்த, அன்று மட்டுமே பொலிஸ் பாதுகாப்பு இங்கு இருந்ததாகவும் அதன் பின்னர் பாதுகாப்பற்ற சூழலிலேயே தமது வாழ்க்கை கழிகின்றதெனவும் அவர்கள் வேதனைப்பட்டனர்.

மும்மன்னப்பாடசாலை விவகாரம் தொடர்பில் நாங்கள் உங்களைச் சந்தித்த போது, நீங்கள் வாக்குறுதியளித்தபடி சில நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருநாகல் முக்கியஸ்தர்கள் இங்கு வந்து எங்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து எங்களுக்கு உதவினர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம் என்றும் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்,.

இங்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்,

“நான் இங்கு வந்த பின்னர் இந்த மைதானப் பிரச்சினை தொடர்பில் மாற்றின மக்கள் உங்களை எவ்வளவு அவமானப்படுத்தியிருக்கின்றார்கள், வேதனைப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. பொலிஸார் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை. அதிகாரிகள் எமது சமூகத்திற்கெதிரான சிந்தனையிலேயே இருக்கின்றனர் என்பதையும் என்னால் உணர முடிகின்றது. .

நான் இங்கு வருவதற்கு ஆயத்தமாகிய போது பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த அமைப்பாளர் ஒருவர், நீங்கள் மும்மன்னைக்கு போகின்றீர்களா? எனக் கேட்டார், நான் ஆம் என உறுதியாகக் கூறினேன். “நான் பிரச்சினையை கிளறுவதற்காக அங்கு செல்லவில்லை அதனைத் தொடர்ந்தும் வளர விடாது இரண்டு சமூகங்களும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமா? என்பதை பார்க்கவே அங்கு செல்கின்றேன்” என்றேன்.

பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டினதும் குருநாகல் மாவட்ட அமைப்பாளர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இதய சுத்தியுடன் முன்வந்து அவர்களின் மனச்சாட்சிப்படி செயலாற்றினால் இந்தப் பிரச்சினையை எளிதில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதே எனது கருத்து. அவர்கள் எங்களுக்கு சார்பாக நிற்க வேண்டுமென நான் கூறவரவில்லை. நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் என்று கோருகின்றேன். 

இது தொடர்பில் கொழும்பு சென்று இங்கு நடந்த விடயங்கள், அதன் பின்னனி மற்றும் மைதானம் தொடர்பாக கையளித்த உரிமை ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விடயங்களைத் தொகுத்து ஜனாதிபதிக்கு தெளிவான கடிதமொன்றை எனது கடிதத்தலைப்பில் எழுதுவதற்கு தீர்மானித்துள்ளேன். அதன் பிரதிகளை பிரதமர் மற்றும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கும் சட்ட, ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் என்போருக்கும் அனுப்பிவைத்து அவர்களிடம் நியாயம் கேட்பேன். இந்த மைதானப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட அத்தனை அதிகாரிகளுக்கும் எங்கள் நியாயத்தை எடுத்து சொல்வோம். 

வெறுமனே இந்தப் பிரச்சினையில் இனவாதம் இருக்கின்றதென்று நாம் எழுந்தமானமாக மனம் போன போக்கிலே கூறிவிட முடியாது. இதில் அரசியல் பின்னணி கூட இருக்கலாம். அந்த வகையில் அடாத்தாக எமது மைதானத்தை கபளீகரம் செய்வதர்கு இடமளிக்க முடியாது. நாங்கள் அடிமைகள் அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ துன்பங்கள் இழைக்கப்படுகின்ற போதும் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களில் நாம் பொறுமை காக்கின்றோம். அதற்காக எமது உரிமைகளிலும், உரிமங்களிலும் பிறர் கை வைப்பதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 

மும்மன்ன விடயத்தில் நாங்கள் பேசா மடந்தைகளாக இருந்தால் ஏனைய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளையும் அவர்கள் பயமுறுத்தி அடாத்தாக அபகரிக்கும் நிலைக்கு இது ஏதுவாக அமையும். 

அரசியல்வாதிகளான நாங்கள் எங்களுக்கு இருக்கும் பொறுப்பை சரியாகச் செய்வோம். செய்துவருகின்றோம். உங்களுக்கு பக்கபலமாக என்றும் இருப்போம். மும்மன்ன மைதானப்பிரச்சினையை வென்றெடுப்பதற்கு என்னாலான அனைத்து பங்களிப்பையும் நல்குவதோடு செய்வதோடு சட்ட உதவிகள் தேவைப்படின் அவற்றையும் பெற்றுத்தர நான் வழிவகை உறுதியளிக்கின்றேன் என அமைச்சர் தெரிவித்தார்.