பொலிஸ் அதிகாரிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் ஆழ்ந்த கவலை !

பொலிஸ் அதிகாரிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த கவலை அடைந்துள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ranil_wikramasinghe-2_Fotor

அண்மையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் சில அமைச்சர்களின் முன்னிலையில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொழிலதிபர் மொகமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

தற்போது போதை பாவனை விடயங்கள் குறைந்துள்ளதாகவும், தற்போது இடம் பெற்றுவரும் கொலை மற்றும் கடத்தல் தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியவில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் அதிகாரிகள் தூங்குகின்றார்களா என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு எதையும் செய்யாவிட்டால் அரசாங்கத்திற்கே அது மோசமான பிரதிபலிப்பாக அமையும் என்றும் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்காத பொலிஸ் அதிகாரிகளுக்கு எதற்கு “பொலிஸ் தினம்” எவ்வாறு கொண்டாட முடியும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு பொலிஸ் அதிகாரிகளே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் இடம் பெறும் குற்றச் செயற்பாடுகள் வீதத்தை குறைக்கும் முகமாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது தொடர்பில் அலரி மாளிகையில் பொலிஸ் அதிகாரிகளை முன்னிலையாகுமாறு இதன் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் தற்போதைய நடத்தை தொடர்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடமும் தெரிவிக்குமாறு அமைச்சர் கிரியல்லவுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.