அமைச்சரின் ஊடகப்பிரிவு
மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை (25/08/2016) பாராளுமன்றத்தில் காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வைக் கூட்டம் இடம்பெற்றபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.நவவி, அமைச்சர் றிசாத் பதியுதீனின் இந்த வேண்டுகோளையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனக் குமுறல்களையும் மேற்பார்வைக் குழுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இந்த விடயம் தொடர்பாக தனது கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் பலமுறை சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார். அரசாங்கத்தில் பல்வேறு கூட்டங்களில் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிய போதும், சிலாவத்துறை, முள்ளிக்குளம் மக்களுக்கு இற்றைவரை விமோசனம் வழங்கப்படாமல், தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுவதாக அவர் வேதனைப்பட்டார்.
அமைச்சர் றிசாத் சார்பான அவரது நியாயங்களை ஏற்றுக்கொண்ட கூட்டத்தில் பங்கேற்றவர்கள், இது தொடர்பாக அடுத்த மேற்பார்வைக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதாக உறுதியளித்ததுடன், அது தொடர்பான அத்தனை ஆவணங்களையும் உடன் சமர்ப்பிக்குமாறு நவவி எம்.பியிடம் உறுதியளித்தனர்.
அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களையும், அடுத்த கூட்டத்தில் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானித்தனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனிடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சிலாவத்துறை பிரதேச மக்களும், கத்தோலிக்கர்கள் வாழும் முள்ளிக்குளம் மக்களும் இந்தக் காணிகளை விடுவித்துத் தருமாறு அடிக்கடி கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தப் பிரதேசத்துக்குப் பலமுறை விஜயம் செய்த அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்கள் படுகின்ற அவலங்களை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு சில உதவித் திட்டங்களையும் மேற்கொண்டிருந்தார். முள்ளிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்து, சில மைல் தூரத்தில் தங்கிவாழும் பத்து குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அத்துடன் அந்தப் பிரதேசத்தில் நீர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் அமைச்சர் கரிசனை செலுத்தி வருகிறார்.