லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது எக்நெலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டதாகவோ அல்லது அந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததாகவோ எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம மேலதிக நீதவான் சரோஜா வனிகசேகர எதிரில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.
பத்து அரசாங்க நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை குறிப்பிடுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலானய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.