இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (திங்கள் கிழமை) இரவு நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், சுகாதார விஞ்ஞான ( மருத்துவ ) பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே பீடத்தில், கல்வி பயிலும் இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள், இந்த தாக்குதலை நடத்தியதாக தாக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
அண்மையில் முதலாம் ஆண்டில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கான சந்திப்பொன்று, இரு நாட்களுக்கு முன்னதாக இரண்டாம் ஆண்டு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை முதலாம் ஆண்டு மாணவர்களில் ஒரு சாரார் புறக்கணித்திருந்தனர்.
இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமிடையில் நிலவிய முரண்பாடுகளின் பின்னனியிலே இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.
பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள குறிஞ்சி குமரன் ஆலயத்திற்கு சென்று தாங்கள் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.
தடிகள் மற்றும் ஹெல்மட் போன்றவற்றை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-க்கும் மேற்பட்ட தமிழ் – முஸ்லிம் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற போதிலும் 4 தமிழ் மாணவர்களும், ஒரு முஸ்லிம் மாணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளுர் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சிங்கள மாணவர்கள் தரப்பு கருத்துக்களை பெற தொடர்புகள் கிடைக்கவில்லை.