மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள இந்து மில் வளாகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு மாபெரும் நினைவகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 350 அடி உயரத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை நிறுவப்படும் என மராட்டிய சமூகநீதித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதன் மூலம் தாழ்ந்த நிலையில் இருந்த மக்களும் சமஉரிமை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த பாபா சாகிப் ‘பாரத ரத்னா’ டாக்டர் அம்பேத்கருக்கு மராட்டிய மாநில அரசின் சார்பில் மாபெரும் நினைவகம் அமைக்கப்படுகிறது.
மும்பையில் உள்ள இந்து மில் வளாகத்தில் கட்டப்பட்டுவரும் இந்த நினைவகப் பணிகளுக்கான பூமிபூஜை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.
கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்த நினைவகத்தில் 350 அடி உயரத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை நிறுவப்படும் என மராட்டிய சமூகநீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே நேற்று அறிவித்துள்ளார்.
சமூக அநீதிக்கு எதிராக போராடிய அம்பேத்கரின் நினைவாக இந்த சிலைக்கு ’சமத்துவ சிலை’ என பெயர் சூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.