பாஸ்டன் குண்டுத்தாக்குதலை நடத்தியவருக்கு மரண தண்டனை !

150409093750_dzhokhar_tsarnaev_512x288_afp_nocredit

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மராத்தன் ஓட்டத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

குற்றம் சாட்டப்பட்ட ஸோக்கார் சார்னேவ் என்பவருக்கு விஷ ஊசி கொடுத்து மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்ற நடுவர் அமைப்பு ( ஜூரிகள்) தீர்ப்பளித்தனர்.

2013ம் ஆண்டு நடந்த பாஸ்டன் மராத்தன் போட்டியின் போது போட்டியின் வெற்றிக்கோட்டின்மீது குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ததில் மூவர் கொல்லப்பட்டனர். பல டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை சார்னேவும் அவரது சகோதரரும் செய்தனர்.

அவரது சகோதரர் டமெர்லென் சார்னேவ் பின்னர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக சார்னேவ் தரப்பு வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்யக்கூடும். இந்த
மேல்முறையீட்டு வழக்கு முடிவடைய பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

இப்போது சார்னேவுக்கு 21 வயதாகிறது. சார்னேவ் சகோதரர்கள் செச்சன்யர்கள். பல ஆண்டுகள் முந்தைய சோவியத் குடியரசான கிர்கிஸ்தானிலும் பின்னர் டேகெஸ்தானிலும் வசித்த அவர்கள் அமெரிக்காவுக்கு 2002ல் குடியேறினார்கள்.

150421043750_boston_bombs_top_624x351_ap