நாமலுக்கெதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, எனினும் நிரூபிக்கப்படவில்லை

Duminda-Dissanayake

 

எவரையும் பழிவாங்குவதற்காகவோ, எவருக்கும் இடையூறு செய்வதற்காகவும் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்பு குழுவே புதிய அமைப்பாளர்கள் தொடர்பான தீர்மானத்தை எடுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் துமிந்த திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் 100க்கு 100 வீதமானவர்கள் கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கி செயற்பட்டவர்கள். கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல கட்சியுடன் இருந்து செயற்படும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பல முன்னாள் அமைப்பாளர்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற வகையில் பிரபலமாக இருந்தாலும் கட்சியின் கட்டமைப்புக்குள் இருக்கவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் கட்சியின் கட்டமைப்புகள் இருக்காமல், கட்சியின் யாப்புக்கு எதிராக செயற்பட்டால், அவர்களும் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இதற்கு முன்னர் மே தினத்தில் சிலர் கட்சிக்கு எதிராக கட்சியின் ஒழுக்கத்தை மீறி செயற்பட்டாலும் ஒரு அடியை பின்நோக்கி வைத்து கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து அமைதியாக இருந்தார்.

எனினும் தொடர்ந்தும் அப்படியான செயற்பாடுகள் நடக்கும் போது கட்சியை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நியாயமானது எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஹம்பாந்தோட்டை மேயர் எரான் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் ஒப்புவிக்கப்படவில்லை எனவும் இதேபோல் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.