தீர்வு விடயத்தில் ஹக்கீமை கட்சியின் போராளிகளும் நம்பமாட்டார்கள் : அஷூர் சேகு இஸ்ஸதீன்

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தாம் ஒரு சிறுபான்மை குழு மட்டுமே என்பதிலிருந்து விடுபட்டு, தாம் தனித்துவமுடைய சுய நிர்ணய உரித்துடைய ஒரு தனித்தேசியம் என்பதை அடையாளப்படுத்தி அங்கீகரிக்கும் வரை தமிழர்களுக்குச் சமனானதும் சற்றும் குறைவில்லாததுமான ஒரு அரசியல்  தீர்வை வடக்கு கிழக்கில் பெறுவது சாத்தியமாகாது. 
 
இந்த கருத்தை மக்கள் மயப்படுத்தி முஸ்லிம்களுக்கான நிரந்தர சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்கிற்குத் தேவைப்படுவதாக இலங்கையின் கிழக்கின் எழுச்சியின் செயலாளர் சேகு இஸ்ஸதீன் அஸ்ஸுஹூர் தெரிவித்தார்.
 
மத்திய கிழக்கில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் கிழக்கின் எழுச்சி, முஸ்லிம் சுயநிர்ணயம் மற்றும் முஸ்லிம் தேசியம் தொடர்பில் தெளிவினை ஏற்படுத்தும் நோக்கில் ஆறு  நாள் விஜயமாக மத்திய கிழக்கிற்கு வந்துள்ள கிழக்கின் எழுச்சியின் செயலாளர் கட்டம் கட்டமாக பலரைச் சந்தித்து கிழக்கின் எழுச்சி, முஸ்லிம் சுயநிர்ணயம் மற்றும் முஸ்லிம் தேசியம் தொடர்பில் தெளிவினை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அதன் ஒருகட்டமாக துபாயில்  ஒன்றுகூடல் ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதிலிருந்து.
 
ஹகீம் அவர்கள் இந்தப் பிரச்சினையை இதய சுத்தியுடன் அணுகி வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்வைப் பெற்றுத்தருவார் என்று கட்சியின் போராளிகளும் நம்ப மாட்டார்கள். சேதாரமில்லாமல் எமது உரிமைகளை விட்டுக் கொடுத்து எம்மை நிரந்தர அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் அவர் துணை போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
இந்த மண்ணில் பிறந்து இந்த மண்ணின் துயரங்களை இதயங்களில் சுமந்த ஒருவருக்கே இதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும். 
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் சமயத்தில் முஸ்லிம்கள் அதைக் குழப்புவது போல் தமக்கும் தீர்வு கேட்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். 
 
சிங்களவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்று தமிழர்கள் நினைப்பதைப் போல், தமிழர்களிடமிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமென்று முஸ்லிம்கள் நினைப்பதற்கு நியாயமான காரணங்கள் பலவற்றை தமிழ் சகோதரர்கள் முஸ்லிம் கிராமங்கள் அனைத்திலும் முஸ்லிம்களின் இரத்தத்தால் அழிக்கவோ மறக்கவோ முடியாதவாறு எழுதிச் சென்றிருக்கிறார்கள்.
 
வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தனித்தேசியமாக கொள்ளப்படக் கூடியவர்கள்  என்பதை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகத்தான் மத்திய கிழக்கில் உள்ள வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கைக்காக அமீரகம் வந்து சந்திப்புக்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.