எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது: யாழ்ப்பாணத்தில் றிசாத்

 

சுஐப் எம்.காசிம்.  

பல்வேறு கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலேயே தான் எதிர்நீச்சல் போட்டே  மக்கள் பணியாற்றி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

14054791_631453853687330_1962235592_n_Fotor

இன்று காலை (16/08/2016) யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், யாழ் முஸ்லிம் வாட்டாரத்துக்குச் சென்று, அங்கு மஸ்ஜிதுல் மரியம் ஜும்ஆ பள்ளிவாசலில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.   

மீள்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், எதிர்வரும் காலங்களில் இந்தக் கஷ்டங்களை படிப்படியாகத் தீர்க்கக்கூடிய நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளதென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். 

13989496_631453967020652_298120461_n_Fotorஅமைச்சர் அங்கு உரையாற்றிய போது,

கடந்த காலங்களில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுப்பதில் எனக்கு பல்வேறு தடைகளும், முட்டுக்கட்டைகளும் இருந்தன. யாழ்ப்பாண முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதற்கான முயற்சிகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த விடயத்தில் நாம் வெற்றி பெறுவோம். என்னைப் பொறுத்தவரையில் மக்கள் பணியையே எனது முழு மூச்சாகக்கொண்டு செயற்பட்டு வருகின்றேன். எனக்குக் கிடைத்த பதவியை இறைவனுக்கு பொருத்தமான வகையில் பயன்படுத்துகின்றேன். 

எனினும், இனவாதிகளும், என்மீது எரிச்சல் கொண்டவர்களும் என்னைத் தூற்றுவதையே தமது தொழிலாகக்கொண்டுள்ளனர். அவர்கள் கனவில் கூட என்னை நச்சரிப்பதையே தங்கள் பணியாகக் கருதுகின்றனர். 

உதாரணமாக நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற இனவாதத்துக்கு எதிரான பேரணியில் குழப்பம் விளைவித்த சிங்ஹலே அமைப்பினர், என்னை மையமாக வைத்தே தூஷித்தனர். அவர்களின் ஏச்சுக்களுக்கும், மோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் நான் ஆளானேன். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் நான் மன்னாரிலேயே இருந்தேன். இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும் எனக்கு வசைபாடுகின்றனர். 

யாழ்ப்பாண முஸ்லிம்கள், மீள்குடியேற்றத்தில் படுகின்ற கஷ்டங்களை நான் கண்ணாரக் கண்டவன். அடிப்படை வசதிகளின்றி அவர்கள் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.    

13988731_631453890353993_454440320_n_Fotor

பிற மாவட்டங்களில் வாழும் யாழ் முஸ்லிம்களும் மீண்டும் தமது இடங்களில் குடியேறுவதற்கு ஆர்வம்கொள்ள வேண்டும். எல்லோரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் மீள்குடியேற்றம் எளிதாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மௌலவி சுபியான் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இப்போதுதான் விடிவு கிடைத்துள்ளது. எங்களின் மீள்குடியேற்றத்தில் அமைச்சர் காட்டும் ஆர்வத்துக்கும், அக்கறைக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.  

இந்தக் கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மினும் பங்கேற்றிருந்தார்.