உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் பிரேசில் வீரர் டியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் (2012) பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாக இருக்கிறது.
உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீரர் டேவிட் லுக்தா ருடிஷா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 42.15 வினாடியில் கடந்தார். தடகளத்தில் கென்யா 2-வது தங்கத்தை வென்றது. ஏற்கனவே பெண்கள் மராத்தானில் வெற்றி பெற்று இருந்தது.
அல்ஜீரியா வீரர் தவ்பீக் ஒரு நிமிடம் 42.61 வினாடியில் கடந்து வெள்ளி பதக்கமும், அமெரிக்க வீரர் கிளைடன் முர்ரே 1 நிமிடம் 42.93 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பகாமஸ் வீராங்கனை ஷானே மில்லர் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 49.44 வினாடியில் கடந்தார். அவர் அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்சை வீழ்த்தினார். பெலிக்ஸ் 49.51 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஜமைக்கா வீராங்கனை ஷெரிக்கா ஜேக்சன் 49.85 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.