சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல – அனைவருக்குமே பொதுவானது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி பேசியதாவது:-
சமீபகாலமாக நாம் பார்த்து வருவதுபோல் நம்முடைய சுதந்திரத்துக்கு சில இருட்டு சக்திகள் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல – எல்லோருக்குமே பொதுவானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியத்துடன் சுதந்திரமாக வாழும் உரிமையும், தனது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையும் உள்ளது. நாட்டில் அச்சமின்றி வாழும் கவுரவமும், வெறுப்புணர்வு சார்ந்த சக்திகளால் நசுக்கப்படாமல் தங்களது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.
இந்த உரிமைகளை உள்ளடக்கிய சுதந்திரத்தை நமக்கு கஷ்டப்பட்டு பெற்றுத்தந்த தலைமுறையினர் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர்கள் அளித்துச் சென்ற அரிய பரிசான இந்திய அரசியலமைப்பு சட்டம் நம்மிடம் உள்ளது.
நமது முன்னோர்கள் எதற்காக போராடினார்களோ.., அந்த மதிப்பிற்குரிய கொள்கைகள் இந்த அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் வீரமிக்க நமது இளைஞர்களை கொண்ட இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.