வெள்ளத்தில் 1000 கி.மீ. தூரம் அடித்து செல்லப்பட்ட யானை உயிருடன் மீட்பு

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதில் கூட்டத்துடன் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பெண் யானை பிரிந்து வெள்ளத்தில் சிக்கியது. பின்னர் அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அந்த யானையால் கரை ஒதுங்க முடியவில்லை. எனவே, கடந்த ஜூன் மாதம் முதல் 6 வாரங்களாக அடித்துச் செல்லப்பட்ட யானை அண்டை மாநிலமான வங்காள தேசத்துக்குள் புகுந்து ஜமால்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் குளத்தில் இறுதியாக கரை ஒதுங்கியது

தொடர்ந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டதால் யானை சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்தது. குளத்தில் தத்தளித்தபடி மூழ்கி கொண்டிருந்தது. அதைப் பார்த்த கிராம மக்கள் கயிறு மற்றும் சங்கிலியால் பிணைத்து கஷ்டப்பட்டு அதை கரைக்கு கொண்டு வந்தனர்.

4 டன் எடையுள்ள அந்த யானை முழுமையாக மயக்கம் அடைந்தது. தகவல் அறிந்ததும் வங்காள தேச வன அதிகாரிகள் விரைந்து வந்தனர். மயக்க நிலையில் உள்ள யானைக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர்.

தற்போது அது சபாரி பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அது இந்திய எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தூரம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அந்த யானையை மீட்டு கொண்டு வர 3 இந்திய அதிகாரிகள் வங்காள தேசம் சென்றனர். ஆனால் யானை மிகவும் பலவீனமாக இருப்பதால் உடனடியாக கொண்டு வர முடியாத நிலை உள்ளது. எனவே, சிறிது காலம் கழித்து அதற்கான முயற்சி மேற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.