மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது 41ஆவது வயதில் சென்னையில் இன்று மரணமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றன.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய “அழகே அழகே” பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நா.முத்துக்குமார் – தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர்.