பாகிஸ்தானின் குவெட்டா நகரில் கடந்த புதன்கிழமை அன்று சாலையோரத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் நீதிபதிக்கு பாதுகாப்பாக சென்ற 4 போலீசார் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். நீதிபதி காயமின்றி தப்பினார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இதனை டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் தெரியப்படுத்தி உள்ளது.
ஆனால், இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பாகிஸ்தானில் காலூன்ற முடியாமல் போராடி வரும் ஐ.எஸ். அமைப்பினர், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான மற்றொரு முயற்சி’ என்று தெரிவித்தார்.
இதற்கு முன் ஏராளமான வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 73 பேரை பலிவாங்கிய குவெட்டா மருத்துவமனை வளாக தாக்குதலையும் நாங்கள்தான் நடத்தினோம் என்று ஐ.எஸ். கூறியது. ஆனால், பாகிஸ்தான் தலிபான்களின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு தாங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிய பிறகுதான் ஐ.எஸ். பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.