அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்பும் களத்தில் உள்ளனர்.டொனால்டு டிரம்ப் எப்போதும் அதிரடியான கருத்துக்களை கூறி தன்னைச்சுற்றி சர்ச்சை வளையத்தை உருவாக்கி இருக்கிறார். இதனால் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது.
அனல் பறக்கும் பிரச்சாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இரு அதிபர் வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டொனால்டு டிரம்ப் ஒரு கருத்தை கூறியிருந்தார். அதாவது, தற்காப்புக்காக தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமையை தான் அதிபரானால் ரத்து செய்துவிடுவேன் என்று ஹிலாரி கூறுகிறார். இதனால்,துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை பறிபோய்விடும்.
அவ்வாறு ரத்து செய்தால் தனி நபர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே, துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் நினைத்தால், அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இவரது இந்தக் கருத்து சக போட்டியாளருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரம்பு மீறி பேசுகிறீர்கள் என்று டொனால்டு டிரம்புக்கு ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஹிலாரி, எனது நண்பர்களே, வார்த்தைகள் முக்கியமானவை. அதிபருக்கான போட்டியில் இருக்கும் போதே, அமெரிக்காவின் அதிபராக நீங்கள் இருந்தாலோ, வார்த்தைகள் மிகவும் கொடிய விளைவுகளை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.