இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதும் கைவிடப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அஸ்வினும், சாகாவும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாளான புதன்கிழமை, இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர்.
இந்திய அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. கே.சி.பிராத்வெயிட்(53), பிராவோ(18) ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இன்னும் 246 ரன்கள் அந்த அணி இந்தியாவை விட பின் தங்கியுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று(வியாழக்கிழமை) தொடக்கம் முதலே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தில் முதல் பகுதி முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.