தயா மாஸ்டருக்கு நாளை வரை விளக்கமறியல் – வவுனியா மேல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்று பிரபல்யம் பெற்றுள்ள வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் அவரை  நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஆயினும் நான்கு சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சரீரப் பிணையாளிகளை நீதிமன்றம் நேரில் பார்வையிட வேண்டும் என தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அந்தப் பிணையாளர்களை நாளை 11 ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் இந்த வழக்கின் எதிரியாகிய தயா மாஸ்டரை வவுனியா சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவிடாமல், அரச விரோதச் செயற்பாட்டாளர்களாகிய விடுதலைப்புலிகளுக்கு கேடயமாகப் பயன்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து தடுத்ததாக தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தி வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டிற்கு தான் சுற்றவாளி என தயா மாஸ்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது, 

ஆயினும் தயா மாஸ்டர் முன்னதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடப்பட்டிருப்பதைக் கவனத்திற் கொண்டு, இவரை நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் வரையில் வடமாகாணத்தைவிட்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு நாளும் யாழ் பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடையில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து, 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார். 

ஆயினும், சரீரப் பிணையாளர்களை நீதிமன்றம் பார்;வையிட வேண்டும் என்பதற்காக அவரை அது வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.