ஜனாதிபதியினால் ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை உப குழு நியமனம்

 

ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை (09/08/2016) இடம்பெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்தக் குழுவில், மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இடம்பெறுகின்றனர். 

ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட இந்தக் குழு வெகுவிரைவில் கூடி ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஒலுவில் கடலரிப்பு தொடபில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் பி.கே.பிரபாத் சந்திர கீர்த்தி ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, கடலரிப்புப் பிரதேசத்தை பார்வையிட்டதுடன், மக்களையும் சந்தித்து அவர்களின் கஷ்டங்களை நேரில் அறிந்துகொண்டார்.