ஈராக்கில் 3 ஆயிரம் பேரை மனித கேடயமாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் : ஐ.நா. தகவல்

ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனி நாடு அமைத்துள்ளனர். அவற்றை அமெரிக்க கூட்டுப்படை உதவியுடன் ஈராக் ராணுவம் சண்டையிட்டு கைப்பற்றி வருகிறது.

கிர்குக் அருகேயுள்ள ஹவிகா மாவட்டத்தையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் மீட்க இங்கு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. எனவே, கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி கிர்குக் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களை வெளியேற விடாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து மனித கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர்.

அவர்களை மனித கேடயமாக பயன்படுத்தி குண்டு வீச்சில் இருந்து தப்பி வருகின்றனர். இத்தகவலை ஐ.நா. அகதிகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டில் ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை ‘செக்ஸ்’ அடிமைகளாகவும் போரில் குழந்தை வீரர்களாகவும் பயன்படுத்துகின்றனர்.